புதிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உள்நாட்டு அரசியலிலும் சவால்கள் காணப்படுகின்றன.சர்வதேச அரசியல் களநிலையிலும் அதிக சவால்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.சர்ச்சைக்குரிய சீன கப்பலான யுவான் வாங் 5 வருகை மிகப்பெரிய சிக்கலை ஜனாதிபதிக்கு வழங்கியிருந்தது.மேற்படி விடயம் அடங்கிப் போய் இருந்தாலும் அது ஏற்படுத்தியிருக்கும் முரண்நிலைகள் ஆறிவிடவில்லை.
செப்டம்பர் ஏழாம் திகதி தொடங்க இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 51 வது கூட்டத் தொடர் புதிய அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் நிறைந்ததாக அமையும் என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.இத்தகைய சூழ்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடும் முடிவுறாத நிலையிலேயே காணப்படுகிறது.இத்தகைய பின்னணிகள் சர்வதேச களநிலையில் காணப்படுகின்ற நிலையில் அரசியல் அமைப்பிற்கான 22 வது திருத்தம் எதிர்பார்த்தது போல் உடனடியாக செயல் உருவம் பெறும் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறாமல் இருக்கும் நிலையில் சகலதிற்கும் சர்வரோக நிவாரணியாக எதிர்பார்க்கப்பட்ட சர்வ கட்சி அரசாங்கமும் முழுமை பெறும் நிலையும் நிறைவேறாத நிலை தொடர்கிறது.
இன்றுள்ள சூழ்நிலையில் இலங்கையின் எதிரணி அரசியல் சக்திகளில் அழுத்தங்களை விட ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆளும் பொதுஜன பெரமுனையின் உள்ளக முரண்பாடுகள் தீர்க்க முடியாத சவால்களாக ஒன்றன்பின் ஒன்றாக நிலையெடுத்து நிற்கின்றன.நல்லாட்சி காலத்தில் பழிவாங்கலுக்கு உள்ளாகியிருந்த அரச அதிகாரிகளுக்கு நஷ்ட ஈடாக 117 மில்லியன் ரூபாய்களை வழங்க வேண்டும் என்ற மஹிந்த ராஜபக்சவின் அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற ஆளும் பொதுஜன பெரமுனையின் கோரிக்கைக்கு சம்மதம் தெரிவிப்பதா நிராகரிப்பதா என்ற நிலை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதேநேரம் புதிதாக அமைக்கப்பட இருக்கும் அமைச்சரவையில் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி,ஜொன்சன் பெனான்டோ , நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது மேல் வந்துள்ளது.ஊழல்வாதிகளை இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க இடம் அளிக்கக்கூடாது என்பது காலி முகத்திடல் போராட்டத்தின் போது இந்த நாட்டு மக்கள் எடுத்திருக்கும் பொதுவான முடிவாக காணப்படும் நிலையில் ஊழலுடன் சம்பந்தப்பட்ட இவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமானால் மீண்டும் ஒரு போராட்ட களம் உருவாவதற்கு வாய்ப்பை வழங்கியதாக அமைந்து விடும்.
மேலும் பொதுஜன பெரமுனையின் 50 செயற்பாட்டாளர்களுக்கு மாவட்ட ரீதியில் அரச நிறுவனங்களில் பொறுப்புகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் ரணில் விக்ரமசிங்கவிடம் வந்து சேர்ந்துள்ளது.மறுபக்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் சர்வ கட்சி அரசாங்கத்தில் இணைவதானால் சர்வகட்சிகளைக் கொண்ட தேசிய சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஊழல் புரிந்தவர்களுக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் வழங்கக் கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது. மறுபக்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச 220 மில்லியன் மக்களுக்கு நாசத்தை ஏற்படுத்திய முன்னைய ஆட்சியாளருக்கு நஷ்ட ஈடு வழங்குவது என்ற பேச்சே இடம்பெறக்கூடாது என தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் சர்வகட்சி அமைச்சரவையில் பங்கேற்க தமது விருப்பங்களை தெரிவித்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பது தொடர்பாக தனது இணக்கத்தை ஏதோ விதத்தில் தட்டி கழித்து வருகிறார். தமிழ் முற்போக்கு முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஒப்பாசாரத்துக்காக சில நிபந்தனைகளை கூறி வந்தாலும் அவர்கள் இணைந்து செயல்படக்கூடிய விதத்தில் மறைமுகமாக தமது விருப்பங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கோட்டபாய ராஜபக்ஷ மீண்டும் இலங்கைக்கு திரும்புவது தொடர்பாகவும் அவரது வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான செலவுகள் சம்பந்தமாக அரசாங்க தகவல் திணைக்களம் ஒருவிதமான கருத்தையும் அமைச்சர் பந்துல குணவர்த்தன வேறொரு விதமான கருத்தையும் தெரியப்படுத்தியிருந்த நிலையில் அது பல சர்ச்சைகளை ஏற்படுத்திய சூழ்நிலையில் வழமை போல் ஊடகங்கள் தனது கருத்தை பிழையாக வெளிப்படுத்தி இருக்கின்றன என மிகப் பலவீன பின்வாங்குதலுடன் அமைச்சர் பந்துல குணவர்த்தன விடயத்தை திசை திருப்பியிருந்தார்.ஆனாலும் முன்னை நாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி நாடு திரும்புவார் என ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினரான உதயங்க விரதுங்க தெரிவித்திருக்கும் கருத்து குழப்பங்களை உருவாக்கியுள்ளது.
பொதுஜன பெரமுனையின் கோட்டபாய ராஜபக்சவுக்கு நெருங்கிய விசுவாசியான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வேறு சில உதிரி அமைப்புகளும் கோட்டபய ராஜபக்ச இலங்கை வருவதற்கான ஒழுங்குகளை உடனடியாக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.ஆனாலும் முன்னை நாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அமெரிக்க கிரீன் கார்ட் பிரஜா உரிமை பெறுவதில் அதிக ஈடுபாடு காட்டுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேநேரம் சீன கப்பலை வரவேற்பதற்கு ஒன்பது எதிரணி கட்சிகளின் சார்பில் சென்றிருந்த விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் சரத் வீரசேகர போன்றவர்களின் செயற்பாடுகள் கோமாளித்தனம் கொண்டதாக அமைந்திருந்தது. அங்கு இவர்களுக்கான கௌரவமான வரவேற்பு கிடைக்காத நிலையையும் காணக் கூடியதாக இருந்தது.மேற்படி நிகழ்வு தொடர்பில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி .யூ. குணசேகர,விமல் வீரவன்ச,வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தெரிவித்து வரும் கருத்துக்கள் இந்திய விரோத கருத்துக்களாகவும் சீன தேச பற்றாளர்களாகவும் இவர்களை அடையாளப்படுத்தியுள்ளது.
உலகில் ஜனநாயக விழுமியங்களை பின்பற்றும் இலங்கைக்கு அருகே அமைந்திருக்கும் நாட்டிற்கு எதிராகவும் உலகின் பிற்போக்கு சக்திக்கு துணையாகவும் அதிக வட்டிக்கு கடன் வழங்கி நாடுகளை கபளிகரம் செய்யும் சீன தேசத்திற்கு வக்காளத்து வாங்கும் வாசுதேவ நாணயக்கார போன்றவர்களை இடதுசாரியாக இன்றும் கூட எண்ணும் சில தமிழ் நெஞ்சங்கள் இனியாவது தமது நிலைப்பாடுகளில் இருந்து விலகி நிற்பார்கள் என நம்ப முடியும்.
பாரிய சவால் மிக்க சூழ்நிலையில் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றிருந்தாலும் எரிபொருட்களுக்கான நீண்ட க்யூ வரிசைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மிகவும் வறிய நிலையில் வாழும் மக்களின் மண்ணெண்ணெய் விடயத்தில் தீர்வை எட்டுவதில் கால விரயம் ஏற்படுத்தி இருந்தமை வருந்தத்தக்கதே.புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தடை நீக்கம் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க எதிரான விமர்சனங்கள் வெளிவந்திருக்கும் நிலையில் தற்போது புலம்பெயர் மக்களுக்கான செயற்பாட்டு அலுவலகம் ஒன்றை திறப்பதற்கான வெளிப்படுத்தல் ஒன்றையும் ரணில் விக்ரம்சிங்க வெளிப்படுத்தியுள்ளார்.கடந்த இரண்டாம் திகதி பாராளுமன்றத்தில் தனது கொள்கை விளக்க உரையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வை ரணில் விக்ரம்சிங்க மீண்டும் வலியுறுத்தி இருந்தார்.மேலும் தமிழ அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவரை சந்தித்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தன.
எனவே நல்லாட்சியில் செயல்படுத்த முடியாமல் போன விடயங்களை புதிய ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்க தனது ஈடுபாட்டை தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.புலம் பெயர் தமிழ் மக்கள் மீது அவர் காட்டும் கரிசனை வரவேற்கத்தக்கதே. ஆனாலும் அகத்திலே வாழும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போன மக்களுக்கான நீதி பொறிமுறை,அரச படைகளின் பொறுப்பில் உள்ள நிலங்களை மிள கையழித்தல் போன்ற விடயங்களில் அடையாளத்திற்காவது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் செயற்பாட்டை ஆரம்பிக்காவிட்டால் புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் ஒத்துழைப்பு எதிர்மறையாகவே அமையும்.