cw2
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உலகளாவிய ஆயர்கள் மன்ற மாநாட்டில், பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்படவுள்ளது.
பரிசுத்த பாப்பரசருக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பான ஆயர்கள் மன்றம் தொடர்பான புதிய விதிகள் ஆயர்கள் மன்றத்தின் செயலகத்தினால் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டது.
இதன்படி, பெண்கள் மற்றும் மதகுருமார் அல்லாத சாதாரண மனிதர்களுக்கும் முதல் தடவையாக வாக்குரிமை வழங்கப்படவுள்ளது.
5 கன்னியாஸ்திரிகளுக்கும் வாக்குரிமை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாப்பரசரினால் நேரடியாக தெரிவு செய்யப்படவுள்ள, ஆயர்கள் அல்லாத 70 பேர் கொண்ட குழு ஒன்றுக்கும் வாக்குரிமை வழங்கப்படவுள்ளது.
இக்குழுவில் அரைவாசிப் பேர் பெண்களாக இருப்பர் என தான் நம்புவதாக பாப்பரசர் முதலாம் பிரான்சிஹ் தெரிவித்துள்ளார். இளம் சமூகத்தினர் தொடர்பாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை இத்தகைய மாநாடுகளில் பார்வையாளர்களாக மாத்திரம் பங்குபற்றுவதற்கே பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இம்மன்றத்தில் வாக்குரிமை பெற்றவர்களில் ஆண்களே அதிகம் இருப்பர். இதில் பங்குபற்றவுள்ள 400 இற்கும் அதிகமானோரில் 370 பேர் வாக்குரிமை கொண்ட அங்கத்தவர்களாக இருப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் குறிப்பிடத்தக்க மாற்றமாக இம்மறுசீரமைப்பு கருதப்படுகிறது.
"இது ஒரு புரட்சி அல்ல. இது ஒரு முக்கியமான மாற்றம்" என, ஆயர்கள் மன்றத்தின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான கர்தினால் ஜீன் குளோட் ஹோல்ரிச் கூறியுள்ளார்.