cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

ட்ரம்ப் கைது: அமெரிக்க வரலாற்றில் கருப்புப் பக்கங்களாக பதிவான அந்த 57 நிமிடங்கள்

ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைப்பதற்காகப் பணம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நியூயோர்க்கில் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ட்ரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதிகள், முன்னாள் ஜனாதிபதிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் இரகசியக் காவல் படையினர் புடைசூழ நீதிமன்றத்திற்கு வந்த ட்ரம்ப், வழக்கமான நீலநிற கோட்டும், சிவப்பு நிற டையும் அணிந்திருந்துள்ளார்.

நீதிமன்றத்திற்குள் நுழையும் போதே சற்று மந்தமாகக் காணப்பட்ட ட்ரம்ப், தனக்காகக் காத்துக் கொண்டிருந்த வழக்கறிஞர்களை நோக்கி மெதுவாக நடந்து சென்றுள்ளார்.

அங்கே, ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்திக்கவே இல்லை. அவரது உடல் மொழி மற்றும் முக பாவனைகள் பெரிய அளவில் எதையும் வெளிப்படுத்துவதாக இல்லை.

ட்ரம்ப் முன்னிலையாவதைச் செய்தியாக்குவதற்காக அங்கே கூடியிருந்த பத்திரிகையாளர்கள் தொலைபெசிகள் மற்றும் மடிக்கணினிகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படவில்லை.

அத்துடன், நீதிபதி ஜூவான் மெர்ச்சான் வந்ததும் ட்ரம்ப் உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளனர்.

நீதிமன்றத்திற்கு வெளியே அரசியல் மற்றும் ஊடக வெளியில் மிகவும் பரபரப்பாக இந்த வழக்கு பேசப்பட்டாலும், வழக்கைக் கையாறும் நீதிபதி மெர்ச்சான் ஒருபோதும் குரலை உயர்த்தவே இல்லை.

வெகு நிதானமாக வழக்கைக் கையாண்டார். வழக்கறிஞர்களுக்கான காலக்கெடு, அடுத்த விசாரணைக்கான தேதி நிர்ணயம் போன்ற வழக்கமான நீதிமன்ற நடைமுறைகளாகவே அது அமைந்தது.

அரசியல் அரங்கில் வெகு ஆடம்பரமாக, ஆரவாரிக்கக் கூடியவரான ட்ரம்ப் நீதிமன்றத்தில் ஒரு சில வார்த்தைகளையே பேசியுள்ளார்.

ட்ரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசிக்கையில் ட்ரம்ப், "நான் குற்றம் செய்யவில்லை" என்று மட்டுமே பதிலளித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் நீதிபதி மெர்ச்சான், வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளின் போதும் நீங்கள் நேரில் வர அனுமதி உண்டு என்பதை ட்ரம்பிடம் நினைவூட்டினார்.

நீங்கள் இதைப் புரிந்து கொண்டீர்களா என்று நீதிபதி கேட்க, ட்ரம்ப் "ஆம்" என்று ஒரே வார்த்தையில் பதிலுரைத்துள்ளார்.

நீதிமன்றத்திற்குள் கட்டுக்கடங்காமல் அல்லது விசாரணையைச் சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டால், விசாரணையில் முன்னிலையாவதற்கான உரிமையை இழக்க நேரிடும் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டார் என்று குற்றம்சாட்டிய அரசு தரப்பு வழக்கறிஞர், "என் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டால் உயிரிழப்பும் மற்றும் பேரழிவுமே மிஞ்சும்" என்று குறிப்பிட்டு அவர் பதிவிட்ட ஒரு சமூக ஊடகப் பதிவைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டுகள் ஒரு மிகப்பெரிய அநீதி என்று நம்பும் ட்ரம்ப், மனம் நொந்துபோய் அவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் என்று ட்ரம்ப் தரப்பு வழக்கறிஞர்கள் பதிலளித்துள்ளனர்.

மிகவும் மோசமான சொல்லாடல்களையும், வார்த்தை பிரயோகங்களையும் விரக்தியில் செய்துவிட்டார் என்று நியாயப்படுத்தும் உங்களை வாதங்களை ஏற்க முடியாது என்று நீதிபதி மெர்ச்சான் கூறியுள்ளார்.

அவதூறு பேச்சு கூடாது என்ற எனது முந்தைய எச்சரிக்கை ஒரு வேண்டுகோள்தான், உத்தரவு இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, இந்த விவகாரம் மீண்டும் எழுந்தால் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் என்று எச்சரித்தார்.

ட்ரம்ப் மீதான வழக்கின் நீதிமன்ற நடைமுறைகள் சுமார் ஒரு மணி நேரம் நீடித்துள்ளன. ட்ரம்ப் தனது இருக்கையில் இருந்து எழுந்ததுமே ரகசிய காவல் படையினர் அவரை சூழ்ந்து கொண்டனர்.

ட்ரம்ப் தனது வழக்கறிஞர்களிடம் சன்னமான குரலில் மெதுவாகப் பேசினார். இதனால், சற்று தொலைவில் அமர்ந்திருந்த பத்திரிகையாளர்களால் அவர் என்ன பேசினார் என்பதைக் கேட்க முடியவில்லை.

நீதிமன்றத்தின் மையத்தில் இருந்த நடைபாதை வழியே நடந்து சென்று பின் வாசல் வழியே ட்ரம்ப் வெளியேறினார். வெளியே நின்றிருந்த ஊடகத்தினரிடம் அவர் எதையும் பேசவில்லை.

அவர் மிகவும் இறுக்கமாகக் காணப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதிகளாகப் பதவி வகித்தவர்களில் குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்ட முதல் நபர் டொனால்டு ட்ரம்ப்தான். அந்த வகையில், நீதிமன்றத்தில் ட்ரம்ப் ஆஜரான அந்த 57 நிமிடங்களும் அமெரிக்க அரசியல் வரலாற்றில், கருப்புப் பக்கங்களாகப் பதிவாகியுள்ளன.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்