உளவு வேலைகளுக்கு பாகிஸ்தான் நடிகைகளை பயன்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரி திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் அடில் ராஜா. முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தீவிர ஆதரவாளரான அவர், கடந்த ஆண்டு ஏப்ரலில் பாகிஸ்தானில் இருந்து திடீரென காணாமல் போனார் என தகவல் வெளியானது.அதன்பின் இங்கிலாந்தில் உள்ள அவரது குடும்பத்தினருடன் இணைந்து விட்டார் என கூறப்பட்டது.
இவர், இராணுவ வீரர் பேசுகிறார் என்ற பெயரிலான யூ-டியூப் சனல் ஒன்றை நடத்தி வருகிறார். 2.9 லட்சம் பேர் அதனை பின்தொடருகின்றனர். அதில் சமீபத்தில் அவர், நாட்டின் சக்தி வாய்ந்த அமைப்புகள் பாகிஸ்தானிய நடிகைகளை உளவு வேலைகளுக்கு பயன்படுத்தியுள்ளது என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.
அவர்கள் பெயர் எதனையும் குறிப்பிடாதபோதும், அவர்களது பெயரின் முதல் எழுத்துகளை பயன்படுத்தி உள்ளார். இந்த வீடியோ வைரலானதும், பாகிஸ்தான் உளவு அமைப்பு தயாரித்து வெளியிட்ட நாடகங்களில் பணியாற்றியவர்களை குறிப்பிட்டு, அவர்களே அடில் கூறியுள்ள நடிகைகள் என மக்கள் கூற தொடங்கினர்.
அதில், நடிகை சாஜல் ஆலை என்பவரும் ஒருவர். அதற்கு சாஜல், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நமது நாட்டின் தரம் குறைந்து போவது என்பது வருத்தத்திற்கு உரியது மற்றும் அருவருக்கத்தக்கது. ஒருவரின் தனி பண்பு நலனை படுகொலை செய்வது என்பது மனிததன்மையின் மிக மோசம் வாய்ந்த வடிவம் மற்றும் பாவத்திற்குரியது என தெரிவித்துள்ளார்