cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

உக்ரைன் வீழ்ச்சியடையவில்லை இன்னும் உயிருடன் இருக்கிறது; உக்ரைன் அதிபர் வரலாற்று உரை

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் முடிவில்லாமல் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலேன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு இடையிலான சந்திப்பு அமெரிக்க வெள்ளைமாளிகையில் நேற்று இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பு மற்றும் அமெரிக்க தலைநகரில் உக்ரைன் அதிபர் ஆற்றிய உரை தொடர்பிலும் அமெரிக்க அதிபர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் காணொளி மற்றும் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

உக்ரைன் அதிபரின் அமெரிக்க விஜயமானது, ஜோ பைடன் மற்றும் அமெரிக்க உயர் நிர்வாக அதிகாரிகளுடனான சந்திப்பாக இருக்கும் என்றும், உக்ரைனுக்கான புதிய பாதுகாப்பு உதவியைக் கோருவதாக இருக்கும் எனவும் அமெரிக்க செய்தி நிறுவனமான சி.என்.என் செய்தி வெளியிட்டிருந்தது.

இதேவேளை, உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலேன்ஸ்கி அமெரிக்க தலைநகரில் தனது வரலாற்று உரையை நிகழ்த்தியுள்ளார்.

அந்த உரையில் அவர் தெரிவித்திருப்பதாவது,

போர் தொடங்கியதில் இருந்து ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுவதில் அமெரிக்கா உக்ரைனுக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

எனது மரியாதை மற்றும் நன்றியுணர்வின் வார்த்தைகள் ஒவ்வொரு அமெரிக்கர் இதயத்திலும் எதிரொலிக்கும் என நம்புகிறேன் எனவும், யுத்தம், அழிவுகள் மற்றும் இருள் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் உக்ரைன் வீழ்ச்சியடையவில்லை இன்னும் உயிருடன் இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.

எங்கள் இரு நாடுகளும் இந்த போரில் நட்பு நாடுகளாக உள்ளதுடன், உக்ரேனிய தைரியமும் அமெரிக்க உறுதியும் நமது மக்களின் பொது சுதந்திரம் மற்றும் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

மேலும், போராட்டத்தில் நிற்பதற்கு மட்டுமல்ல, போர்க்களத்தில் வெற்றி பெறுவதற்கான திருப்புமுனையை அடைவதற்கும் அமெரிக்காவின் ஆதரவு முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பணம் தொண்டு அல்ல, அது உலகளாவிய பாதுகாப்பு மற்றும் ஜனநாயகத்திற்கான முதலீடு எனவும், அதை தாங்கள் பொறுப்புடன் கையாள்கிறோம் எனவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேசமயம், அமெரிக்க அதிபர், உக்ரைன் அதிபர் மற்றும் உக்ரைன் மக்களை பெருமைப்படுத்தி தனது டுவிட்டர் பதிவை இட்டுள்ளார்.

அதிபர் ஜெலென்ஸ்கியும் உக்ரைன் மக்களும் என்ன சாதித்திருக்கிறார்கள் என்பது உலகம் முழுவதற்கும் முக்கியமான விடயம் எனவும், அமெரிக்காவும் உக்ரைனும் இணைந்து சுதந்திரச் சுடரை பிரகாசமாக எரிய வைக்கும் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் அமர்ந்திருக்கும் பெருமை எனக்கு கிடைத்தது எனவும், நாங்கள் போர் முழுவதும் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டுள்ளோம், ஆனால் தற்போது நேரில் பேசுவது அர்த்தமுள்ளதாக இருந்தது.

உக்ரேனிய மக்களுக்கு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஆதரவளிக்க அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்று அதிபர் ஜெலென்ஸ்கியிடம், தான்  தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டுவிட் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்