// print_r($new['title']); ?>
day, 00 month 0000

‘டிஷி ரிஷி’ - பிரிட்டன் புதிய பிரதமரின் உத்வேகம் தரும் வரலாறு!

பிரிட்டனின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரராகியிருக்கிறார் ரிஷி சுனக். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்து, வல்லரசு நாடான பிரிட்டனின் பிரதமராகியிருக்கும் ரிஷி சுனக்கின் வாழ்க்கை, முன்னேற விரும்பும் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை அளிக்கக்கூடியது.

நடுத்தர வர்க்கப் பின்னணி

பிரிட்டன் அமைச்சரவையில் ஆசியா, ஆப்பிரிக்கா என வெவ்வேறு கண்டங்களைச் சேர்ந்தவர்கள் முக்கியப் பொறுப்புகளை வகித்தது உண்டு. எனினும், பிரதமர் பதவிக்கு வெள்ளையரல்லாத ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை. வர்க்க ரீதியிலான எல்லைகளைக் கடந்து தனது எதிர்காலத்தைக் கட்டமைத்துக்கொண்டவர் ரிஷி சுனக். அவரது குடும்பத்தினர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். தந்தை யஷ்வீர் சுனக் ஒரு மருத்துவர். தாய் உஷா சுனக் ஒரு மருந்துக் கடையை நடத்திவந்தார். தனது பெற்றோர் வழியாகவே, கடும் உழைப்பு எனும் பாடத்தை ரிஷி சுனக் கற்றுக்கொண்டார். தனது தாய் நடத்திய மருந்துக் கடையில் மருந்துகளை விநியோகம் செய்வது என்பன உள்ளிட்ட பணிகளைச் செய்துவந்தார். அது மட்டுமல்ல, இந்திய உணவகம் ஒன்றின் சிப்பந்தியாகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு.

வின்செஸ்டர் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்தார். அதிகக் கட்டணம் வசூலிக்கும் கல்லூரி அது. பெரும் பணக்காரர்கள், செல்வாக்கு மிக்கவர்களின் பிள்ளைகள் படிக்கும் அந்தக் கல்லூரியில் சேர்ந்தபோது அந்தச் சூழலுக்குத் தன்னைப் பொருத்திக்கொண்டார். அதேசமயம், அதைத் தனது பெருமிதங்களில் ஒன்றாக அவர் கருதியது, பின்னாட்களில் அவர் மீதான விமர்சனத்துக்கும் வழிவகுத்தது. தனது 21-வது வயதில் ஒரு ஆவணப்படத்துக்காகப் பேட்டியளித்திருந்த அவர், “எனது நண்பர்கள் உயர் குடிகளைச் சேர்ந்தவர்கள். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல” என்று கூறியதை அவரது அரசியல் எதிரிகளை அவருக்கு எதிரான பிரச்சாரத்தில் பயன்படுத்திக்கொண்டனர். உண்மையில், அந்தக் கல்லூரியில் அவரைச் சேர்ப்பதற்காக அவரது பெற்றோர் பணத்தைச் சேகரித்துவந்தது குறித்தும் அவர் உருக்கமாகப் பதிவுசெய்திருக்கிறார்.

 

கல்வியில் சிறந்து விளங்கிய ரிஷி சுனக், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல், தத்துவம், பொருளாதாரப் பாடங்களைப் பயின்றார். பின்னர், அமெரிக்கா சென்று ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தார்.

அமெரிக்காவில் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியில் பணியாற்றியபோது, இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவர் நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதா மூத்தியைச் சந்தித்தார். இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர்.

அது மட்டுமல்ல, 42 வயதில் இந்த உயரிய பதவியை அவர் அடைந்திருக்கிறார். பிரிட்டன் வரலாற்றில் கடந்த 200 ஆண்டுகளில் இந்தச் சாதனையைச் செய்திருப்பவர் ரிஷி சுனக் தான். துறுதுறுப்பான உடல்மொழி, நேர்த்தியான கச்சிதமான உடைகள், தன்னம்பிக்கை மிளிரும் பேச்சு என எப்போதும் சுறுசுறுப்பாகக் காட்சியளிக்கும் ரிஷி சுனக்கை, பிரிட்டன் ஊடகங்கள் ‘டிஷி ரிஷி’ என்றே செல்லமாகக் குறிப்பிடுகின்றன. (டிஷி (Dishy) என்றால், ‘மிகவும் கவர்ச்சிகரமான’ என்று அர்த்தம்!)

அவரது டிப்டாப் தோற்றத்தை வைத்தே அவருக்கு எதிரான விமர்சனங்களும் எழுந்தன. ஆடம்பரமான மாளிகையில் வசிக்கிறார்; விலை உயர்ந்த ஆடைகளையும் காலணிகளையும் அணிகிறார் என்றனர் அவரது அரசியல் எதிரிகள். ஆனால், அவற்றையெல்லாம் அவர் தன்னம்பிக்கையுன் துணையுடன் கடந்துவந்தார். நெருக்கடியான தருணங்களில் பகவத் கீதை தனக்கு உத்வேகம் தருவதாக அவர் குறிப்பிட்டது உண்டு. தனது குடும்பப் பின்னணி, கலாச்சார விழுமியங்கள் குறித்து அடிக்கடி பொதுவெளியில் அவர் பகிர்ந்துகொள்வதும் உண்டு. அதேசமயம், தனது மதம் குறித்து வெளிப்படையாக அவர் பெருமிதம் தெரிவித்ததில்லை.

டேவிட் லாய்டு ஜார்ஜுக்கு (1916 முதல் 1922 வரை பிரதமராக இருந்தவர்) பின்னர், மது உள்ளிட்ட பழக்கங்கள் இல்லாத முதல் பிரதமர் ரிஷ் சுனக் தான் என பிரிட்டன் பத்திரிகைகள் புகழாரம் சூட்டுகின்றன. அதிகபட்சம் கொக்கா கோலா அருந்துவாராம்.

நடைமுறை சார்ந்த சிந்தனைகளையும் கொள்கைகளையும் கொண்டவர். கடந்த மே மாதம் நடந்த தேர்தலின்போது, சக கட்சி லிஸ் ட்ரஸ் முன்வைத்த வரிக் குறைப்பு யோசனைகளை ‘தேவதைக் கதைகள்’ என்று விமர்சித்தார். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதுதான் முதன்மைக் குறிக்கோள் என்பதில் தீர்மானமாக இருப்பவர். சாத்தியக்கூறுகள் கொண்ட நடவடிக்கைகள் மூலமே அதைச் சாதிக்க முடியும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார். தான் பின்பற்றும் விழுமியங்கள் மீது அசைக்க முடியாத உறுதி கொண்டவர். “பொய்யான வாக்குறுதி வழங்கி வெற்றிபெறுவதைவிடவும், கொள்கையில் உறுதியாக நின்று தோற்பதே மேல்” என்று பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக முடிவெடுக்க கொண்டுவரப்பட்ட பிரெக்ஸிட் தீர்மானத்தை ஆதரிப்பதில் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் குழப்பம் நிலவியபோது, வெளியேறுவதையே ஆதரித்தார் ரிஷி சுனக். உண்மையில், அதன் பின்னர்தான் அவரது அரசியல் வாழ்க்கையில் அடுத்தடுத்து உயர்வுகள் ஏற்பட்டன என்கிறார்கள்.

அதிகப் பெரும்பான்மையுடன் பிரதமராகியிருக்கும் ரிஷி சுனக், தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக, யாருக்கும் அமைச்சகப் பதவி ஆசை காட்ட வேண்டிய அழுத்தத்துக்கு ஆளாகவில்லை. இதனால், சுதந்திரமாகத் தனது அமைச்சரவையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் செளகரியம் அவருக்கு வாய்த்திருக்கிறது. இதனால், திறமைவாய்ந்தவர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை அவர் உருவாக்குகிறார்.

ஒரே ஆண்டில் மூன்று பிரதமர்கள் என்று பிரிட்டனில் அரசியல் ஸ்திரத்தன்மை காணப்படுகிறது. அத்துடன், உக்ரைன் போர் காரணமாக மளமளவென உயர்ந்த விலைவாசியும், முந்தைய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸின் வரிக்கொள்கையால் விளைந்த பாதிப்புகளுமாகப் பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. சாமானியப் பின்னணியிலிருந்து உருவாகி, ஓர் அசாதாரணமான காலகட்டத்தில் பிரிட்டனின் பிரதமராகப் பதவியேற்கிறார் ரிஷி சுனக். சவால்களில் அவர் வெல்வாரா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்!


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்