cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

அமெரிக்காவில் கோலாகலமாக தீபாவளி கொண்டாட்டம்

இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி இந்தியாவில் வருகிற 24-ந்திகதி கொண்டாடப்படுகிறது. அதைப்போல பல நாடுகளிலும் வாழும் இந்தியர்கள் இந்த பண்டிகையை விமரிசையாக கொண்டாட உள்ளனர்.

அந்தவகையில் அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டது. நாட்டின் பல மாகாணங்களின் தலைநகர், கவர்னர் மாளிகைகளில் தீபாவளி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தலைநகர் வாஷிங்டனில் அரசு சார்பில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இதில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்திய-அமெரிக்க பிரபலங்கள் தலைநகரில் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரீஸ், தனது வீட்டில் நேற்று பண்டிகையை கொண்டாடினார். இதற்காக பிரபலமான இந்திய-அமெரிக்கர்கள், இந்திய தூதரக அதிகாரிகள் என ஏராளமானோருக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று தீபாவளி கொண்டாடினார். இதில் பங்கேற்பதற்காக சுமார் 200 இந்திய-அமெரிக்கர்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

இதில் இந்திய நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும், பங்கேற்றவர்களுக்கு இந்திய உணவுகளும் பரிமாறப்பட்டன.

இதைப்போல வெள்ளை மாளிகையில் வருகிற 24-ந்திகதி ஜனாதிபதி ஜோபைடன், தனது மனைவி ஜில் பைடனுடன் தீபாவளி கொண்டாட உள்ளார். இதில் ஏராளமான இந்தியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்நது 26-ந்திகதி வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன், தனது அமைச்சகத்தில் தீபாவளி விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் ஏராளமான தூதரக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த 15-ந்தேதி தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது. இதில் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், செனட்டர் சக் சியூமர், இந்திய துணை தூதர் ரந்திர் ஜெய்ஸ்வால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், அடுத்த ஆண்டு (2023) முதல் தீபாவளி பண்டிகைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என அறிவித்தார். இது தீபங்களின் திருவிழா குறித்து அறிய குழந்தைகளை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய செனட்டர் சியூமர், ‘நாங்கள் எங்கள் சமூகத்தையும், எங்கள் இந்திய சமூகத்தையும் நேசிக்கிறோம், நாங்கள் அனைவரும் இங்கு நியூயார்க்கில் எங்கள் பன்முகத்தன்மையுடன் ஒன்றிணைவதை நாங்கள் விரும்புகிறோம்’ என்று தெரிவித்தார்


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்