cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

குவியும் உலகத் தலைவர்கள்; இதுவரை இல்லாத பாதுகாப்பு வளையத்தில் இங்கிலாந்து

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ளதால், பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் அங்கு குவிந்துள்ளனர். இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நீண்ட காலம் பதவி வகித்த ராணி 2-ம் எலிசபெத் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 8-ம் தேதி காலமானார். அவரது உடல் பலத்த பாதுகாப்புடன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு 13-ம் தேதி கொண்டுவரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். இரவிலும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ராணியின் மீதுள்ள அன்பை வெளிக்காட்ட மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, ராணி எலிசபெத்தின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ராணியின் இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ளதால் 2,000-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்குமாறு ஏறக்குறைய அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் இங்கிலாந்து அழைப்பிதழ்களை அனுப்பியது. இங்கிலாந்துக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களைப் பாதுகாக்க, எம்ஐ5 மற்றும் எம்ஐ6 உளவுத்துறை நிறுவனங்கள், மற்றும் பெருநகர காவல்துறை, ரகசிய சேவை ஆகியவை இணைந்து செயல்படுகின்றன.

இங்கிலாந்து காவல் துறை இதுவரை மேற்கொள்ளாத மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்து முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் காணப்படும் என்று முன்னாள் ராயல் பாதுகாப்பு அதிகாரியான சைமன் மோர்கன் தெரிவித்துள்ளார். சுமார் 7.5 லட்சம் பேர் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் சார்பாக துணை அதிபர் வாங் கிஷான், இறுதிச் சடங்கில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றனர். இதேபோல், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் ஜப்பானின் பேரரசர் நருஹிட்டோ, இந்தியாவின் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்ட பல தலைவர்களும் இறுதிச் சடங்கில் பங்கேற்கின்றனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்