// print_r($new['title']); ?>
day, 00 month 0000

சென்னையில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி கடந்த மாதம் 31-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் சிறிய மற்றும் பெரிய அளவிலான சிலைகள் என சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. 

தலைநகர் சென்னையில் மட்டும் 2,505 பிரமாண்ட சிலைகள் உள்பட 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. விநாயகர் சதுர்த்தி நிறைவு பெற்றதில் இருந்தே சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன. பெரிய விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான ஊர்வலம் நேற்று நடந்தது. இதையொட்டி சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பழமையான திருவட்டீஸ்வரன் கோவில் அருகே விநாயகர் ஊர்வலத்தையொட்டி பெற்றோருக்கு பிள்ளைகள் பாதபூஜை மற்றும் கோ பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் கயிலாய வாத்தியங்கள் முழங்க விநாயகர் சிலை ஊர்வலத்தை இந்து முன்னணி பொதுச்செயலாளர் முருகானந்தம், மாநகர தலைவர் ஏ.டி.இளங்கோவன், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் கே.சி.ராஜா உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். 

இதேபோல நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளும் அந்தந்த பகுதி வழக்கப்படி கொண்டாட்டங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டன. சிலை வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் பாதுகாப்புக்காக போலீசாரும் அமர்ந்திருந்தனர். 

எந்தெந்த பகுதிகளில் இருந்து வரும் விநாயகர் சிலைகள் எந்த கடல் பகுதியில் கரைக்கலாம்? என்பது குறித்து போலீசார் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன்படி மேற்கண்ட 4 இடங்களில் கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகளை தள்ளி சென்று கடலில் கரைக்கும் வகையில் 'டிராலி' வழித்தடம் அமைக்கப்பட்டது. 

மேலும் 2 ராட்சத கிரேன்களும் நிறுத்தப்பட்டு இருந்தன. இவற்றின் மூலம் ராட்சத விநாயகர் சிலைகளை தூக்கிச்சென்றும், தள்ளிக்கொண்டும் கடலில் கரைக்கப்பட்டன. குறிப்பாக பட்டினப்பாக்கத்தில் கடலில் கரைப்பதற்காக விநாயகர் சிலைகளுடன் ஏராளமான வாகனங்கள் சர்வீஸ் சாலையில் காத்திருந்தன. 

பல மணி நேரத்துக்கும் மேல் காத்திருக்க நேரிட்டதால், மெரினா கலங்கரை விளக்கம் அருகே கடலில் விநாயகர் சிலைகளை சிலர் கரைத்தனர். அதனை பார்த்து மற்றவர்களும் தாங்கள் கொண்டு வந்த சிலைகளை அங்கு கரைத்தனர். இதனால் மெரினா கலங்கரை விளக்கம் பகுதியிலும் தொடர்ந்து விநாயகர் சிலைகளை கரைக்க தொடங்கினர். 

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாம்பரம் எல்லைக்கு உட்பட்ட மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம், மீனம்பாக்கம், குன்றத்தூர், அனகாபுத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் நீலாங்கரை பல்கலைநகர் கடற்கரையிலும், ஆவடி எல்லைக்குட்பட்ட திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி, அம்பத்தூர், கொரட்டூரில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பாடி மேம்பாலம் வழியாக நியூ ஆவடி சாலை, அண்ணா வளைவு, நெல்சன் மாணிக்கம் சாலை வழியாகவும், பூந்தமல்லி காட்டுப்பாக்கம், போரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் விருகம்பாக்கம், வடபழனி வழியாகவும், திருவேற்காடு, வானகரம், மதுரவாயல் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு வழியாகவும் வள்ளுவர்கோட்டம் கொண்டு வரப்பட்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்டன. 

இதே போன்று மணலி, மாத்தூர், காரனோடை, பாடியநல்லூர், செங்குன்றம், புழல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வந்து பட்டினப்பாக்கம் கடலில் கரைக்கப்பட்டன. இதனால் கடற்கரை முழுவதும் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு முன்பாக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 

அதேவேளை வீட்டில் வைத்து வழிபட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை மெரினா கடலில் பொதுமக்கள் நேற்று காலை முதலே கொண்டுவந்து கரைத்தனர். குடும்பம் குடும்பமாக கடற்கரைக்கு வந்து விநாயகர் சிலைகளை கடற்கரையில் வைத்து வணங்கி பின்னர் கடலில் கரைத்து வழிபட்டனர். கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்வையொட்டி, சென்னையில் 15 ஆயிரம் போலீசாரும், 2 ஆயிரம் ஊர் காவல்படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

கடலோர பாதுகாப்பு படையினர் கப்பல் மூலமும், ஹெலிகாப்டர் மூலம் அவ்வப்போது கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். சென்னையில் 2,505 பெரிய அளவிலான சிலைகள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் நேற்று கரைக்கப்பட்டதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். விநாயகர் சிலை ஊர்வலமும் அமைதியாகவே நடந்து முடிந்தன. இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று இரவு நிருபர்களிடம் கூறும்போது, 

''சென்னையில் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் விநாயகர் சிலை ஊர்வலம் அமைதியாகவே நடந்து முடிந்தன. முழுமையான அளவில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தன. ஒத்துழைப்பு தந்த அனைவருக்குமே நன்றி. அதேபோல சென்னையில் நடந்த சமத்துவ விநாயகர் பூஜைகளில் பங்கேற்ற மாற்று மத பிரமுகர்களுக்கும் நன்றி'' என்றார்.

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்