கனடாவில் உள்ள விஞ்ஞானிகள் "ஜாம்பி மான் நோய்" என்று அழைக்கப்படும் ஒரு அபாயகரமான தொற்று பரவுவது குறித்து கவலை எழுப்பியுள்ளனர்.
மேலும், அது விரைவில் மனிதர்களை பாதிக்கக்கூடும் என்றும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
நாள்பட்ட இளைப்பை நோயான இது பெரும்பாலும் "ஜாம்பி மான் நோய்" என்று அழைக்கப்படுகிறது.
தி கார்டியன் செய்திச் சேவையின் தகவலின்படி, கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியா தற்சமயம் நோயின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு உத்தியை வெளியிட்டுள்ளது.
நோய் அறிகுறி
நாள்பட்ட இளைப்பை நோய் (CWD) என்பது மான் இனங்களை பாதிக்கும் ஒரு புரதப்பீழை நோயாகும்.
பாதிக்கப்பட்ட விலங்கு அறிகுறிகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆகலாம்.
கடுமையான எடை இழப்பு (விரயம்), தடுமாற்றம், கவனமின்மை மற்றும் பிற நரம்பியல் அறிகுறிகள் ஆகியவை நோய்க்கான அறிகுறிகளில் அடங்கும்.
நாள்பட்ட இளைப்பை நோய் அனைத்து வயது விலங்குகளையும் பாதிக்கலாம் மற்றும் சில பாதிக்கப்பட்ட விலங்குகள் அறிகுறியை வெளிப்படுத்தாது இறக்கலாம்.
குறித்த நோயானது விலங்குகளுக்கு ஆபத்தானது மற்றும் இதற்காகக சிகிச்சைகள் அல்லது தடுப்பூசிகள் இல்லை.
மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்
இன்றுவரை, மனிதர்களில் இந் நோய்த்தொற்றின் அடையாளம் எதுவும் கண்டிறியப்படவில்லை.
எனினும், சில விலங்கு ஆய்வுகள், நாள்பட்ட இளைப்பை நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்ணும் அல்லது பாதிக்கப்பட்ட மான் அல்லது எலிகளிடமிருந்து மூளை அல்லது உடல் திரவங்களுடன் தொடர்பு கொள்ளும் குரங்குகள் போன்ற சில வகையான விலங்குகளுக்கு இந் நோய் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஆய்வுகள் மக்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற கவலையை எழுப்புகிறது.
1997 ஆம் ஆண்டு முதல், உலக சுகாதார அமைப்பு அனைத்து அறியப்பட்ட புரதப்பீழை நோய்களின் முகவர்களை மனித உணவுச் சங்கிலியில் நுழையாமல் வைத்திருப்பது முக்கியம் என்று பரிந்துரைத்துள்ளது.
முதல் அடையாளம்
இது முதன்முதலில் 1960 களில் கண்டறியப்பட்டது.
இந்த நோய், 2023 வரை அமெரிக்காவில் குறைந்தது 31 மாநிலங்களிலும், கனடாவின் மூன்று மாகாணங்களிலும் பதிவாகியிருந்தது.
நோர்வே, பின்லாந்து மற்றும் ஸ்வீடனில் உள்ள மான் இனங்களிலும் கண்டறியப்பட்டது.
ஆய்வாளர்களின் எச்சரிக்கை
இது மலம், உமிழ்நீர், இரத்தம் அல்லது சிறுநீர் போன்ற உடல் திரவங்கள் வழியாக விலங்குகளிடையே பரவக்கூடும் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.
நாள்பட்ட இளைப்பை புரதப்பீழை நோய் சுற்றுச்சூழலில் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.