cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

பிரித்தானிய கட்டுப்பாட்டு தீவில் தவிக்கும் ஈழத் தமிழர்கள்

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டியாகோ கார்சியா தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் மற்றும் தற்கொலை முயற்சிகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் முகாமைத்துவ அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த தீவு புகலிட கோரிக்கையாளர்களை நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்க ஏற்ற இடம் அல்லவென ஐநா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தத் தீவு இங்கிலாந்து-அமெரிக்க இராணுவத் தளமாகப் பயன்படுத்தப்படுகிறது. அங்கு ஆயிரக்கணக்கான துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தத் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட யாருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை. 1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த தீவில் யாருக்கும் அதிகாரப்பூர்வமாக குடியுரிமை வழங்கப்படவில்லை.

தற்போது குறித்த தீவில் 61 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இலங்கை தமிழர்கள் ஆவர், இவர்கள் 2021ஆம் ஆண்டு கனடா செல்லும் போது படகு விபத்துக்குள்ளாகி குறித்த தீவிற்கு முதன் முதலாகச் சென்றனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐநா அதிகாரிகளுக்கு முதல் முறையாக தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அவர்களின் விஜயத்தின் பின்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

அதிகாரிகளின் விஜயத்தின் போது பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல் குறித்து அகதிகள் முறைப்பாடு செய்துள்ளனர். இதில் குழந்தைகள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுபவர்கள் முகாம்களில் தொடர்ந்து வாழ்கின்றனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குடும்பக் கூடாரங்கள் மற்றும் ஒற்றை ஆண் கூடாரங்களை நியமிக்க கடந்த ஜூலையில் எடுக்கப்பட்ட முடிவு ஒரு "நேர்மறையான படி" ஆனால் "தடுப்பு பொறிமுறையாக போதுமானதாக இருக்க வாய்ப்பில்லை" என்று அது குறிப்பிடுகிறது.

அங்குள்ளவர்கள் எலிகளின் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பலர் தற்கொலை முயற்சி குறித்தும் வெளிப்படுத்தியுள்ளனர்.

16 குழந்தைகளை உள்ளடக்கிய புகலிடக் கோரிக்கையாளர் குழு, தாங்கள் சலிப்பாகவும், மனச்சோர்வுடனும், நம்பிக்கையற்றவர்களாகவும் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

நாய் ஒன்று முகாமைப் பார்வையிட வந்ததையும், பாதுகாப்பு வேலி வழியாக அதைப் பார்த்ததையும் அவர்களில் சிலர் நினைவு கூர்ந்தனர்.

"நாய் வேலிக்கு வெளியே இருக்க முடிந்தது, ஆனால் நாங்கள் அந்த இடத்தில் இல்லை என்பது எங்களுக்கு வருத்தத்தை அளித்ததாக கூறினார்கள்," என்று அறிக்கை கூறுகிறது.

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இணைய அணுகல் இல்லை, அவர்களின் சட்டத்தரணிகளை இப்போது வரை நேரில் சந்தித்ததில்லை.

டியாகோ கார்சியாவில் உள்ள 61 தமிழர்கள் "சுதந்திரம் பறிக்கப்பட்டவர்கள்" என்று கருதுவதாக ஐநாவின் அகதிகள் முகமை கூறுகிறது.

"அவர்கள் ஒரு மூடிய இடத்தில் வசிக்கிறார்கள், விருப்பப்படி வெளியேற வாய்ப்பில்லை, இது சர்வதேச காவலில் வைக்கப்படுவதற்கு ஒப்பானது” என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

"இங்கு வாழ்வது நரகத்தில் வாழ்வது போன்றது" என்று ஒரு தாய் கூறியதாக மேற்கோள் காட்டப்படுகிறது. "குழந்தைகள் தாமதமாக படுக்கைக்குச் செல்கிறார்கள்.

இரவில் தூங்குவதில்லை, ஏனென்றால் அவர்களுக்கு நிம்மதி இல்லை. பெற்றோர்களாகிய நாங்கள் நிம்மதியாக இல்லை என்று குழந்தைகள் உணருவதே இதற்குக் காரணம்.

முகாமில் உள்ள குழந்தைகள் "விளையாட்டுத்தனமாகவும் பதிலளிக்கக்கூடியவர்களாகவும்" தோன்றினாலும், "ஒரு மூடிய சூழலில், மோசமான மனநலத்தால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு அருகாமையில் வாழ்வது அவர்களின் உணர்ச்சி ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கான கவலையான அறிகுறிகள்" இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

இந்நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்களை "அவசரமாக இடமாற்றம்" செய்ய வேண்டும், சர்வதேச பாதுகாப்பு தொடர்பான இறுதி முடிவுகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐநா அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் உரிமைகோரல்கள் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கான தீர்வுகளைப் பாதுகாக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்