day, 00 month 0000

இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 41 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இந்தியா, முதலாவது அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இந்தப் போட்டிக்கு முன்பதாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியான 13 வெற்றிகளைப் பதிவு செய்த இலங்கையின் வெற்றி அலைக்கு இதன் மூலம் இந்தியா முடிவு கட்டியது.

இந் நிலையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் வியாழக்கிழமை 14ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்தாட தகுதிபெறும். 

அப் போட்டி மழையினால் முழுமையாக கைவிடப்பட்டால் நிகர ஓட்ட வேக அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு இலங்கை முன்னேறும்.

இன்றைய போட்டியில் 20 வயதான துனித் வெல்லாலகே, சரித் அசலன்க ஆகியோரின் சுழற்சியில் தடுமாற்றம் அடைந்த இந்தியா 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றது.

ஆனால், இலங்கை வீரர்களின் மோசமான துடுப்பாட்டம் வெல்லாலகே, அசலன்க ஆகியோரின் ஆற்றல்களை மழுங்கடிக்கச் செய்தது.

ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, கே.எல். ராகுல் ஹார்திக் பாண்டியா ஆகியோரின் விக்கெட்களைக் கைப்பற்றிய வெல்லாலகே தனது 13ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலாவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.

மறுபக்கத்தில் மற்றைய சுழல்பந்துவீச்சாளர் சரித் அசலன்கவும் திறமையாக பந்துவீசி 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

39ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் சரித் அசலன்க இதற்கு முன்னர் 6 போட்டிகளில் மாத்திரம் பந்து வீசியிருந்ததுடன் மொத்தமாக 14 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் கைப்பற்றியிருந்தார்.

கடைசியாக அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2022இல் பந்துவீசியிருந்த சரித் அசலன்க 22 போட்டிகளின் பின்னரே இன்றைய தினம் பந்துவீசி தனது தனிப்பட்ட அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவு செய்தார்.

அவர், இஷான் கிஷான், ரவிந்த்ர ஜடேஜா, ஜஸ்ப்ரிட் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோரின் விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 213 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை பெற்றது.

ரோஹித் ஷர்மாவும் ஷுப்மான் கில்லும் 67 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், ஷுப்மான் கில் (19), விராத் கோஹ்லி (3), ரோஹித் ஷர்மா ஆகியோர் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததால் இந்தியா நெருக்கடியை எதிர்கொண்டது.

ரோஹித் ஷர்மா 48 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களைப் பெற்றார்.

தனது 248ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய ரோஹித் ஷர்மா 22 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது 10,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த 15ஆவது வீரரானார். இந்தியர்களில் 6ஆவது வீரரானார்.

அத்துடன் விராத் கோஹ்லிக்கு அடுத்ததாக ரோஹித் ஷர்மா குறைந்த இன்னிங்ஸ்களில் 10000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்துள்ளார்.

கோஹ்லி 205 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை அடைந்ததுடன் ரோஹித் ஷர்மாவுக்கு 241 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டது. முதன் முதலில் 10000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்த சச்சின் டெண்டுகல்கர் 259 இன்னிங்ஸ்களில் அந்த மைல்கல் சாதனையை எட்டினார்.

தொடர்ந்து இஷான் கிஷான், கே. எல். ராகுல் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 63 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை பலப்படுத்த முயற்சித்தனர்.

ஆனால் ராகுல் (39), இஷான் கிஷான் (33) ஆகிய இருவரும் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். அத்துடன் இந்தியா 6 விக்கெட்களை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது.

இந்தியா 47 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது சிறு மழை பெய்ததால் மாலை 6.22 மணிக்கு ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடர்ந்தபோது மேலும் 16 ஓட்டங்களை மொத்த எண்ணிக்கைக்கு சேர்த்தது.

அக்சார் பட்டேல் 26 ஓட்டங்களைப் பெற்றதுடன் மொஹமத் சிராஜ் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் துனித் வெல்லாலகே ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 10 ஓவர்களில் 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் சரித் அசலன்க ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 9 ஓவர்களில் 18  ஓட்டங்களுக்கு   4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

214 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 41.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இலங்கை துடுப்பாட்ட வீரர்களின் மோசமான அடி தெரிவும் கவனக்குறைவான ஆட்டமும் இலங்கையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

சரித் அசலன்க (22), தனஞ்சய டி சில்வா (41), துனித் வெல்லாலகே  ஆகியோர் மாத்திரம் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

ஆரம்ப வீரர்களான பெத்தும் நிஸ்ஸன்க (6), திமுத் கருணாரட்ன (2) ஆகிய இருவரும் கவனக் குறைவான துடுப்பாட்டங்களால் நடையைக் கட்டினர். 

இந்தப் போட்டிவரை 4 இன்னிங்ஸ்களில் பிரகாசிக்கத் தவறிய திமுத் கருணாரட்ன பெரும்பாலும் அடுத்துவரும் போட்டிகளில் குசல் பெரேராவுக்கு வழிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்த சதீர சமரவிக்ரம பொறுமையை கடைப்பிடிக்காமல் அவசரப்பட்டு 17 ஓட்டங்களுடன் விக்கெட்டை தாரை வார்த்தார்.

சரித் அசலன்க 22 ஓட்டங்களைப் பெற்று களம் விட்டகன்றார்.

அணித் தலைவர் தசுன் ஷானக்கவும் மோசமான அடி தெரிவினால் 9 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இந் நிலையில் தனஞ்சய டி சில்வாவும் துனித் வெல்லாலகேயும் ஜோடி சேர்ந்த 7ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு பெரும் சோதனையைக் கொடுத்தனர்.

ஆனால், தனஞ்சய டி சில்வா பொறுமை இழந்து பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்து 41 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிய இளம் வீரர் துனித் வெல்லாலகே 42 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பின்வரிசையில் எவரும் இந்தியாவின் பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்கவில்லை.

பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரவிந்த்ர ஜடேஜா 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சகலதுறைகளிலும் பிரகாசித்த துனித் வெல்லாலகே எவ்வித கேள்விக்கும் இடமின்றி ஆட்ட நாயகனானார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்