சர்வதேச நட்சத்திர பந்து வீச்சாளரும், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான ஹீத் ஸ்ட்ரீக் செவ்வாய் இரவு மரணமடைந்ததாக செய்தி வெளியானது. இந்த செய்தி வெளியாகி 12 மணி நேரம் கழித்து, ஹீத் ஸ்ட்ரீக்கின் முன்னாள் கிரிக்கெட் சகாவும், நண்பருமான ஹென்றி ஒலாங்கா அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளார்.
ஆல் ரவுண்டரான ஹீத் ஸ்ட்ரீக், 1990 - 2005 இடையிலான கால்நூற்றாண்டு காலத்துக்கு உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றிருந்தார். 1993-2005 இடையிலான 65 டெஸ்ட் போட்டிகளில், 1990 ரன்கள் மற்றும் 216 விக்கெட்டுகளை குவித்துள்ளார். 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2,943 ரன்கள் மற்றும் 239 விக்கெட்டுகளை ஹீத் ஸ்ட்ரீக் அள்ளியிருக்கிறார்.
நேரடி களத்திலிருந்து விடைபெற்றபோதும் ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராகவும், பின்னர் வங்கதேசத்தின் சர்வதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் கிரிக்கெட் உலகில் தொடர்ந்திருக்கிறார். ஐபிஎல் பங்களிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் பணி புரிந்திருக்கிறார்.
2021-ல் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக 8 ஆண்டுகள் ஐசிசி தடைக்கு ஆளானார். அணியில் நடந்த தவறுகளுக்கு பொறுப்பேற்பதாக அறிவித்த ஹீத் ஸ்ட்ரீக், நேரடியாக மேட்ச் பிக்ஸிங் எதிலும் தான் ஈடுபடவில்லை என தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
கிரிக்கெட் பயிற்சியாளராக அவரது பந்துவீச்சு அனுபவத்தை கற்றுக்கொள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் காத்திருந்த சூழலில், 49 வயதில் அவரை முடக்கிய புற்றுநோய் காரணமாக தென்னாப்பிரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், புற்று நோய் முற்றிய நிலையில் செவ்வாய் இரவு ஹீத் ஸ்ட்ரீக் மரணமடைந்ததாக செய்தி வெளியானது. இதனை இந்திய நேரப்படி இன்று காலை 10.30 மணியளவில், தனது சமூக வலைதளம் வாயிலாக ஹென்றி ஒலாங்கா மறுத்துள்ளார். ஆனால் ஹீத் ஸ்ட்ரீக் உடல்நலம் குறித்து அவர் தரப்பிலான நேரடி அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
தனது மரண செய்தியை உயிரோடு இருக்கும்போதே வாசிக்கும் பிரபலங்களின் வரிசையில் ஹீத் ஸ்ட்ரீக்கும் சேர்ந்திருக்கிறார்.