பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் எரிபொருள் ஏற்றி சென்ற கொள்கலனுடன் பயணிகள் பேருந்து ஒன்று மோதியதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு இன்று (20.08.2023) அதிகாலை 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து மீது, எதிரில் வந்த எரிபொருள் கொள்கலன் மோதியதில் கொள்கலன் வெடித்துச் சிதறியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், பேருந்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டுள்ளனர்.
இதில், 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 16 பேரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் 4 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் அடையாளங்களைக் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
பேருந்து வேகமாகச் செலுத்தப்பட்டதா? அல்லது சாரதி உறங்கியதால் விபத்து நிகழ்ந்ததா? என்ற கோணத்தில் பஞ்சாப் மாநில பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கோர விபத்தில் பேருந்து மற்றும் கொள்கலன் சாரதிகள் இருவரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.