சீனாவின் ஆக்கிரமிப்பு நடத்தையை எதிர்கொள்வதற்கும், உக்ரைன் நெருக்கடியின் விளைவுகளைச் சமாளிப்பதற்கும், இந்தியா - அமெரிக்கா இடையே நீடித்து வரும் கூட்டாண்மை, குறிப்பாக பாதுகாப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் முக்கியமானது என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ தானேதர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு புது டெல்லியுடனான வாஷிங்டனின் உறவு மிகவும் முக்கியமானது என்று அமெரிக்க காங்கிரஸில் பொதுவான கருத்து உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவுடனான நெருக்கமான உறவுகளுக்கு அமெரிக்காவில் இரு கட்சிகளின் ஆதரவு உள்ளது. ஜூன் 23 ஆம் திகதி இடம்பெற்ற அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றியபோது ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் பிரதமர் மோடிக்கு அளித்த அன்பான வரவேற்பிலிருந்து இது தெளிவாகிறது.
பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையிலான உறவும் நட்பும் ஒரு புதிய பக்கத்தை குறிக்கிறது.
'இந்தியாவுக்கான எங்கள் பயணம் அந்த உறவை நீண்டகால நட்பாக தொடர்ந்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது' என்று அவர் மேலும் கூறினார். தற்போது, உக்ரைன் போர் மற்றும் சீனாவின் ஆக்கிரமிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு இந்தியாவுடனான இந்த உறவு மிகவும் முக்கியமானது என்ற பொதுவான உணர்வு அமெரிக்க காங்கிரஸில் உள்ளது என்றார்.