அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள மவுயி தீவு நகரமான லஹைனாவின் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த தீவிலிருந்து வெளியேறியுள்ளதுடன் இந்த தீயால் நூற்றுக்கணக்கான கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடுவதற்காக மேலதிக நிபுணர்கள் ஹவாய்க்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்டவர்களுக்கான மருத்துவப் பணிகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் அஞ்சப்படும் நிலையில், எதிர்வரும் நாட்களில் இறப்பு எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக ஹவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
லஹைனா நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இந்த காட்டுத்தீ பரவ ஆரம்பித்தது.
இதனால் மவுயி தீவில் உள்ள 35,000 க்கும் மேற்பட்ட மக்கள், வீடுகள், வணிக நிறுவனங்கள் ஆபத்தில் உள்ளதாக ஹவாய் அவசரநிலை மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான சுமார் 12,000 மக்கள் வசிக்கும் கடற்கரை நகரமான லஹைனா முழுவதும் தீ ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காட்டுத்தீயால் லஹைனாவில் 270-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், 2,100க்கும் மேற்பட்டோருக்கு அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் அடைக்கலம் வழங்கியுள்ளது.
மவுயி தீவில் தற்பேது காற்றின் வேகம் சற்று குறைந்துள்ளதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இதனால் மவுயி தீவில் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. காட்டுத்தீயை அணைத்து, மீட்புப்பணியை தீவிரப்படுத்துமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.