day, 00 month 0000

வீராங்கனையின் மார்பை தொட்டதாக பயிற்றுநர் மீது குற்றச்சாட்டு: பீபா விசாரணை ஆரம்பம்

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின்போது வீராங்கனை ஒருவரின் மார்பை முறையற்ற விதமாக தொட்டார் என ஸாம்பியா அணியின் பயிற்றுநர்  புரூஸ் முவாப்பே மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு தொடர்பான தான் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பீபா தெரிவித்துள்ளது.

2023 மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெறுகின்றன. 

இம்முறை முதல் தடவையாக உலகக் கிண்ணத்தில் பங்குபற்றிய ஸாம்பியா மகளிர் அணி, குழு 'சி' இல் இடம்பெற்து. லீக் போட்டிகளில் ஸ்பெய்ன், ஜப்பானிடம் தோல்வியுற்றபின், கொஸ்ட்டாரிக்காவை மாத்திரம் வெற்றிகொண்டு முதல் சுற்றுடன் வெளியேறியது.

இந்நிலையில்,  கடந்த 28 ஆம் திகதி ஸாம்பியா அணியினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வணியின் பயிற்றுநர் புரூஸ் முவாபே, வீராங்கனை ஒருவரின் மார்பை முறையற்றவிதமாக தொட்டார்  என பிரிட்டனின் கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

63 வயதான முவாபே இக்குற்றச்சாட்டு தொடர்பில் பதிலளிக்கவில்லை. 

எனினும், ஸாம்பியா மகளிர் அணி தொடர்பான தொடர்பாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (பீபா ) பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

'ஒழுங்கீன குற்றச்சாட்டையும் பீபா பாரதூரமானதாக கருதுகிறது. இத்தகைய சம்பவங்கள் தொடர்பாக முறைப்பாடு செய்வதற்கு தெளிவான நடைமுறைகளையும் பீபா கொண்டுள்ளது' என அப்பேச்சாளர் கூறியுள்ளார். 

ஆனால், இத்தகைய குற்றச்சாட்டு தொடர்பில் முறைப்பாடு எதுவும் தனக்கு கிடைக்கவில்லை என ஸாம்பியா காலர்பந்தாட்டச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரூபென் கமான்கா தெரிவித்துள்ளார்.

ஸாம்பியா அணியினரின் பயிற்சி செயற்பாடுகள் அனைத்தும் சங்கத்தின் ஊடகப் பிரிவினால் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன எனவும், குற்றம்சுமத்தப்பட்டவாறான  சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது. 

எனினும், நேர்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உயர்ந்த தரத்தில் தான் பேணுவதாகவும், ஒழுங்கீன நடத்தை தொடர்பில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு கிடைத்தால் அல்லது ஆதாரங்கள் கிடைத்தால், கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதற்கு தான் தயங்கப் போவதில்லை எனவும் ஸாம்பியா கால்பந்தாட்டச் சங்கம் தெரிவித்துள்ளது.

புரூஸ் முவாபே மீது கடந்த வருடமும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. ஆனால், அது போலியான குற்றச்சாட்டு என முவாபே மறுத்திருந்தார். 

இவ்வருட உலகக் கிண்ணத்தில் ஸாம்பியாவின் முதல் போட்டிக்கு முன்னர் நடைபெற்ற செய்தியளார் மாநாட்டில் செய்தியாளர் ஒருவர் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பாக முவாபேயிட் வினவினார். எனினும், அப்போது தலையிட்ட பீபா ஊடக அதிகாரி, கால்பந்தாட்டம், உலகக் கிண்ணம் தொடர்பாக மாத்திரம் கேள்வி கேட்குமாறு ஊடகவியலாளர்களிடம் கூறினார். 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்