ட்ரின்பாகோ 2023 பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் வழங்கப்பட்ட முதலாவது தங்கப் பதக்கத்தை அவுஸ்திரேலிய வீராங்கனை லோரென் பேட்ஸ் பெற்றுக்கொண்டார்.
18 வயதுக்குட்பட்டவர்களுக்கான பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை ஜோடியினருக்கு ஆரம்பப் போட்டியில் தோல்வியே கிடைத்தது.
ட்ரினிடாட், ப்றயன் லாரா கிரிக்கெட் பயிற்சியக அரங்கில் நடைபெற்ற பெண்களுக்கான நேரக் கணிப்பு சைக்கிளோட்டப் போட்டியிலேயே அவுஸ்திரேலியாவின் லோரென் பேட்ஸ் வெற்றிபெற்று முதலாவது தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
10 கிலோ மீறறர் நேரக் கணிப்பு சைக்கிளோட்டப் போட்டியை லோரென் பேட்ஸ் 14 மணித்தியாலங்கள் 09 நிமிடங்கள் 31 செக்கன்களில் நிறைவு செய்து வெற்றிபெற்றார்.
அவரது சக நாட்டு வீராங்கனை கெய்ரா வில் வெள்ளிப் பதக்கத்தையும் ஐல் ஒவ் மேன் நாட்டைச் சேர்ந்த ரூபி ஓக்ஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
இது இவ்வாறிருக்க, ப்ளக் ரொக் ஃபெசிலிட்டி 1ஆம் இலக்க அரங்கில் சனிக்கிழமை (05) நடைபெற்ற ஆண்களுக்கான ஏ குழு கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை ஜோடியினர் தோல்வியைத் தழுவினர்.
ட்ரினிடாட் மற்றும் டுபாகோ நாட்டைச் சேர்ந்த ஜஹ்ரீவ் மிகெல், ஜெரோம் மொறிசன் ஜோடியினரிடம் 0 - 2 என்ற நேர் செட்களில் இலங்கையின் மஞ்சுள நிசல், மதுஷான் பெர்னாண்டோ ஜோடியினர் தோல்வி அடைந்தனர்.
முதலாவது செட்டில் 15 - 21 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் 2ஆவது செட்டில் 14 - 21 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் தோல்வி அடைந்தனர்.
இலங்கை ஜோடியினர் தமது 2ஆவது போட்டியில் சைப்ரஸின் அலெக்சிஸ் சவிடிஸ், அனினோஸ் அலெக்சியோஸ் ஜொடியினரை இன்று எதிர்த்தாடவுள்ளனர்.