சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்தியமை தொடர்பில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு "மோடி" என்ற பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்தியமை தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்திருந்தார்.
என்றாலும், குஜராத் உயர்நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இம்மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றது.
“ஒரு அவதூறு வழக்குக்காக 8 ஆண்டுகள் வரை குரல் கொடுக்காமல் இருக்க வேண்டுமா? ராகுலுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் பாஜகவினரால் தாக்கல் செய்யப்பட்டவை” என ராகுல் காந்தி தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பேச்சுகளில் கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
ராகுல்காந்தி வழக்கில் நீதி வென்றது என மு.க.ஸ்டாலின் டுவிட்
"ராகுல்காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது. ராகுலை வயநாடு தொகுதி தக்க வைத்துக் கொண்டுள்ளது.
அவதூறு வழக்கில் அன்பு சகோதரர் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்த உயர் நீதிமன்றின் தீர்ப்பை வரவேற்கிறோம்.
இந்த முடிவு, நமது நீதித்துறையின் வலிமை மற்றும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் ஆகியவற்றின் மீதான நமது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது" என்று பதிவிட்டுள்ளார்.