தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி ஆட்சியமைத்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் தாலிபான்களுக்கும் அமெரிக்க பிரதிநிதிகளும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சந்திப்பில் நாட்டிற்கு அமெரிக்கர்கள் வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள சுற்றுபயண தடை உட்பட பல தடைகளை நீக்குவது குறித்தும், வெளிநாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கிக்கு சொந்தமான சொத்துக்களை திரும்ப பெறுவது குறித்தும் தாலிபான் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அமெரிக்க பிரதிநிதிகள் தரப்பில் ஆப்கானிஸ்தானில் நிலவும் மனித உரிமைகள் பிரச்சனை குறித்து கலந்துரையாடப்பட்டது.
ஆப்கானிஸ்தானின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக வேண்டிய உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அமெரிக்க பிரதிநிதிகள் தாலிபான்களிடம் தெரிவித்துள்ளனர்.
பெண் குழந்தைகளின் கல்வி தடை, பெண்கள் வேலைக்கு செல்வதற்கான தடை, ஊடகங்களுக்கான தடை மற்றும் பிற மத வழிபாட்டு தடை உட்பட தாலிபான் விதித்திருக்கும் பல தடைகள் தொடர்பில் குறித்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
இந்த சந்திப்பில் சிறப்பு அமெரிக்க பிரதிநிதி தாமஸ் வெஸ்ட் மற்றும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கான தூதர் ரீனா அமிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த 2022ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் நிலைக்கொண்டிருந்த தனது படையினரை அமெரிக்கா திரும்ப பெற்றதை அடுத்து தாலிபான்கள் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து, பெண்கள் கல்வி கற்கவும், தொழில் செய்யவும் தடை விதிக்கப்பட்டது.
தலிபான் அரசு ஆட்சியை கைப்பற்றிய உடன் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானுக்கு மத்திய வங்கியின் பணம் ரூ.57 ஆயிரம் கோடியை ($7 பில்லியன்) நியூயார்க் வங்கியில் முடக்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.