day, 00 month 0000

உக்ரைனுடனான சமாதானப் பேச்சுவார்த்தையை நிராகரிக்கப் போவதில்லை : புடின் அறிவிப்பு

உக்ரைன் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை யோசனையை நிராகரிக்கவில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உக்ரைன் படைகள் தாக்கும் போது யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்த முடியாது எனவும் ரஷ்ய ஜனாதிபதி புடின் வலியுறுத்தியுள்ளார்.

ஆபிரிக்க தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் உக்ரைன் - ரஷ்யா நெருக்கடி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே விளாடிமிர் புடின் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் அறிவிப்புக்கு சில மணிநேரங்களில் உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்களால் மாஸ்கோவில் உள்ள இரண்டு அலுவலக கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த ட்ரோன் தாக்குதலுக்கு உக்ரைன் இதுவரை பதிலளிக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தலைநகர் மாஸ்கோவில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்யா மீது போர் தொடுக்கப்படும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

ரஷ்ய பிரதேசத்தின் மீதான தாக்குதல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான போரின் "தவிர்க்க முடியாத, இயற்கையான மற்றும் முற்றிலும் நியாயமான செயல்முறை" என்று ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மூன்று உக்ரேனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இரண்டு அலுவலகங்கள் மீது மோதியதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால், நகர மையத்தின் தென்மேற்கே உள்ள Vnukovo விமான நிலையமும் சிறிது நேரம் மூடப்பட்டது. இரண்டு அலுவலக கட்டிடங்கள் சிறியளவு சேதமடைந்துள்ளதாக நகர மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார்.

Vnukovo விமான நிலையத்திலிருந்து விமானங்கள் விரைவாக நிறுத்தப்பட்டன, மேலும் உள்வரும் விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்