day, 00 month 0000

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கைக்கு சொந்த மண்ணில் மிக மோசமான தோல்வி

இடதுகை சுழற்பந்து வீச்சாளர் நோமான் அலி, வியாழனன்று 7 விக்கெட்களை வீழ்த்தியதன் பலனாக இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் பாகிஸ்தான் அமோக வெற்றியீட்டியது. 

எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில்  4 நாட்களுக்குள் நிறைவுபெற்ற 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவில் பாகிஸ்தானை விட 410 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த இலங்கை, நோமான் அலியின் சுழற்பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்களைத் தாரைவார்த்து தோல்வி அடைந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை தனது சொந்த மண்ணில் அடைந்த மிக மோசமான தோல்வி இதுவாகும். தென் ஆபிரிக்காவிடம் 1993இல் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 203 ஓட்டங்களால் இதே மைதானத்தில் அடைந்த தோல்வியே இதற்கு முன்னர் சொந்த மண்ணில் இலங்கையின் மோசமான தோல்வியாக இருந்தது.

அதேவேளை, அந்நிய மண்ணில் பாகிஸ்தான் ஈட்டிய மிகப் பெரிய வெற்றியாக  இது   அமைந்தது.

காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்களால் வெற்றிபெற்ற பாகிஸ்தான், இந்த வெற்றியுடன் 2 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என முழுமையாக கைப்பற்றியது.

இதன் மூலம் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 - 25க்கான சுழற்சி  பருவ காலத்தை வெற்றியுடன் பாகிஸ்தான் ஆரம்பித்துள்ளது.

இரண்டு போட்டிகளிலும் வெற்றியீட்டிய பாகிஸ்தான் ஐசிசி உலக சம்பியன்ஷிப்புக்கான 24 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டது.

அப்துல்லா ஷபிக் குவித்த இரட்டைச் சதம், அகா கான் குவித்த ஆட்டமிழக்காத சதம், நோமான் அலியின் 7 விக்கெட் குவியல் என்பன பாகிஸ்தானின் வெற்றியை சுலபமாக்கியிருந்தன.

போட்டியின் நான்காம் நாளான வியாழக்கிழமை (27) காலை தனது முதலாவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 563 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பாகிஸ்தான், மொஹமத் ரிஸ்வான் அரைச் சதம் குவித்ததும் முதல் இன்னிங்ஸை டிக்ளயார் செய்தது.

37 ஓட்டங்களிலிருந்து தனது துடுப்பாட்டத்தை தொடர்ந்த மொஹமத் ரிஸ்வான் நான்காம் நாளன்று காலை பாகிஸ்தான் சார்பாக பெறப்பட்ட 13 ஓட்டங்களையும் தனதாக்கி 8ஆவது அரைச் சதத்தைப் பூர்த்திசெய்தார்.

அவர் 50 ஓட்டங்களைப் பூர்த்திசெய்ததும் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 576 ஓட்டங்களுடன் நிறுத்திக்கொண்டது.

மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய  அகா சல்மான்    132 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

முதல் இன்னங்ஸ் நிறைவில் 410 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த இலங்கை, இரண்டாவது இன்னிங்ஸை பெரும் நெருக்கடிக்கு மத்தியில் ஆரம்பித்தது.

எவ்வாறாயினும் நிஷான் மதுஷ்க, அணித் தலைவர்  திமுத் கருணாரட்ன ஆகிய இருவரும் 18 ஓவர்கள் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 69 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், 19ஆவது ஓவரில் நான்காவது பந்துவீச்சாளராக பாகிஸ்தானினால் பயன்படுத்தப்பட்ட இடதுகை சுழல்பந்துவீச்சாளர் நோமான் அலி தனது முதல் பந்திலேயே நிஷான் மதுஷ்கவை ஆட்டம் இழக்கச் செய்து போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்தினார்.

நிஷான் மதுஷ்க 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து இலங்கை துடுப்பாட்ட வீரர்களின் ஆட்டம் இழப்புகள் சீரான இடைவெளியில் இடம்பெற்றன.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த திமுத் கருணாரட்ன (41), குசல் மெண்டிஸ் (14), தினேஷ் சந்திமால் (1), தனஞ்சய டி சில்வா (10), சதீர சமரவிக்ரம (5) ஆகியோரின் விக்கெட்களையும் நோமான் அலி வீழ்த்தினார். இதன் மூலம் இலங்கையின் 2ஆவது இன்னிங்ஸில் முதல் 7 விக்கெட்களையும் நோமான் அலி கைப்பற்றியமை விசேட அம்சமாகும்.

ப்ரபாத் ஜயசூரிய (0), அசித்த பெர்னாண்டோ (0), டில்ஷான் மதுஷன்க (0) ஆகிய கடைசி 3 வீரர்களின் விக்கெட்களை நசீம் ஷா கைப்பற்றினார்.

முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் மிகவும் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 63 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் நோமான் அலி 8 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 70 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களையும் நசீம் ஷா 5 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 17.4 ஓவர்களில் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

எண்ணிக்கை சுருக்கம்

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 166 (தனஞ்சய டி சில்வா 57, தினேஷ் சந்திமால் 34, ரமெஷ் மெண்டிஸ் 27, திமுத் கருணாரட்ன 17, அப்ரார் அலி 69 - 4 விக்., நசீம் ஷா 41 - 3 விக்.)

பாகிஸ்தான் 1ஆவது இன்: 576 - 5 விக். டிக்ளயார்ட் (அப்துல்லா ஷபிக் 201, அகா சல்மான் 132 ஆ.இ., சவ்த் ஷக்கீல் 57, ஷான் மசூத் 51, மொஹமத் ரிஸ்வான் 50 ஆ.இ., பாபர் அஸாம் 39, அசித்த பெர்னாண்டோ 133 - 3 விக்., ப்ரபாத் ஜயசூரிய 194 - 2 விக்.)

இலங்கை 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 188 (ஏஞ்சலோ மெத்யூஸ் 63 ஆ.இ., திமுத் கருணாரட்ன 41, நிஷான் மதுஷ்க 33, நோமான் அலி 70 - 7 விக், நசிம் ஷா 44 - 3 விக.)

ஆட்டநாயகன்: அப்துல்லா ஷபிக். தொடர்நாயகன்: அகா சல்மான்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்