சுவீடனைச் சேர்ந்த பிரபல காலநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பேர்குக்கு எதிhக அந்நாட்டு பொலிஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
சுவீடனின் தென்பகுதியில் கடந்த மாதம் நடைபெற்ற காலநிலை பாதுகாப்பு ஆர்ப்பாட்டமொன்றின் போது பொலிஸாருக்கு உத்தரவுகளுக்கு கட்டுப்பட மறுத்ததாரென கிரேட்டா துன்பேர்க் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
மெல்மோ நகரில் கடந்த மாத மத்தியில், சுற்றாடல் செயற்பாட்டுக் குழுவொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 20 வயதான கிரேட்டாவும் கலந்துகொண்டார்.
புதைபடிவ எரிபொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மெல்மோ துறைமுக நுழைவாயிலை ஆர்ப்பாட்டக்காரர்கள் மறிக்க முற்பட்டபோது, அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பொலிஸார் உத்தரவிட்டிருந்தனர்.
பின்னர், கிரேட்டா உட்பட பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்,
மேற்படி குற்றச்சாட்டுக்கு 6 மாதங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும். எனினும், பொதுவாக இத்தகைய வழக்குகளில் அபராதம் விதிக்கப்படும் என சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.