பிரான்ஸில் வன்முறைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அமைதியைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்திருக்கின்றன.
17 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தைக் கண்டித்து அங்கு 6ஆவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கின்றன.
வன்முறைகளை நிறுத்துமாறு உயிரிழந்த இளைஞரின் பாட்டி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கேட்டுக்கொண்டார்.
பிரான்ஸில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron) தமது அமைச்சரவையிடம் கூறியுள்ளார்.
அவர் நாடாளுமன்றத் தலைவர்களையும் ஆர்ப்பாட்டங்களினால் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களின் 220க்கும் அதிகமான மேயர்களையும் சந்திக்கவுள்ளார். நேற்றிரவு மக்ரோன் அவசரப் பாதுகாப்புக் கூட்டத்தை நடத்தினார்.
நாட்டின் கொந்தளிப்பான சூழலைக் கையாள வேண்டியிருப்பதால் அவர் ஜெர்மனிக்கான தமது அதிகாரத்துவப் பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட 180-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் 45 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.