சர்வதேச மாநாடொன்றில் பங்குபற்றுவற்காக சீனாவுக்குச் சென்ற நியூ ஸிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ், மேலதிக விமானமொன்றையும் பயன்படுத்துகின்றமை தொடர்பில் அந்நாட்டு எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.
சீனாவின் தியான்ஜியான் நகரில் நடைபெறும் உலக பொருளாhர மாநாட்டில் நியூ ஸிலாந்து பிரதமர் ஹிப்கின்ஸ் பங்குபற்றுகிறார்.
பிரதமர் பயணம் செய்யும் விமானப்படை விமானம் கடந்த காலங்களில் அடிக்கடி பழுதடைந்ததால், முன்னாள் தலைவர்கள் பலர் தமது வெளிநாட்டு விஜயங்களின்போது நெருக்கடிகளை எதிர்கொண்டதாகவும் இதனால் மற்றொரு விமானம் பிலிப்பைன்ஸில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹிப்கின்ஸின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு வர்த்தக விவகாரப் பயணம் என்பதையும், பிரதமருடன் பயணம் செய்யும் வர்த்தக தூதுக்குழுவிலுள்ள அங்கத்தவர்கள், ஊடகக் குழுவினரின் எண்ணிக்கை மற்றும் பயணத் தூரம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது எனவும் அப்பேச்சாளர் கூறினார்.
ஆனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் கருத்திற்கொள்ளும்போது இரு விமானங்களைப் பயன்படுத்துவது சிறந்த நடவடிக்கை அல்ல என எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.
நியூ ஸிலாந்து எதிர்க்கட்சியான தேசிய கட்சியின் தலைவர் கிறிஸ் லக்ஸன் இது தொடர்பாக கூறுகையில்,இரு விமானங்களைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழல் ரீதியாக சிறந்தது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
வலதுசாரி 'ஏசிரி' கட்சியின் தலைவர் டேவிட் சேய்மர் கருத்துத் தெரிவிக்கையில், பிரதமரின் மேலதிக விமானம் வெளியிடும் சூழல்மாசு வாயு ஆனது, போர்ட் ரேஞ்சர் வாகனமொன்றில் சந்திரனுக்கு 3 தடவைகள் சென்று வரும் தூரத்துக்குச் சமனான தூரம் பயணிக்கும் போது வெளியிடப்படும் சூழல் மாசு வாயுக்கு சமமானதாகும் எனக் கூறியுள்ளார்.