அசாமில் பெய்த கனமழை காரணமாக உண்டான வெள்ளத்தினால் 108 கிராமங்கள் நீரில் மூழ்கிய நிலையில் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
அசாம் மற்றும் பூடான் நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பக்லாடியா ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் வெள்ளமானது புதிய பகுதிகளில் புகுந்துள்ளது.
அசாமில் நல்பாரி மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 310 ஹெக்டேர் நிலங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. அத்துடன், இந்த வெள்ளத்தால் 2 அணைக் கரைகள், 15 சாலைகள், 2 பாலங்கள், கால்வாய்கள் போன்றன பாதிப்படைந்துள்ளது.
கடும் வெள்ளத்தினால் நல்பாரி மாவட்டத்தில் மட்டும் 44,707 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 108 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அது மட்டுமன்றி, பக்சா , லகீம்பூர் , தமுல்பூர் மற்றும் பார்பேட்டா ஆகிய மாவட்டங்களிலும் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெள்ளத்தினால் மக்கள் மட்டுமன்றி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1.07 லட்சம் கால்நடைகள், வளர்ப்பு பிராணிகள் மற்றும் கோழி பண்ணைகள் போன்றனவும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.