பிரித்தானிய முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு எதிரான பாராளுமன்ற விசாரணைக்குழுவின் அறிக்கைக்கு ஆதரவாக ஆதரவாக அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
இதன்மூலம், பாராளுமன்ற வளாகத்துக்குள் பிரவேசிப்பதற்கு முன்னாள் எம்.பிகளுக்கு வழங்கப்படும் அனுமதியும் ஜோன்சனுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
பிரதமராக பொரிஸ் ஜோன்சன் பதவி வகித்தபோது, கொவிட்19 பரவல் தடுப்பு விதிகளை மீறும் வகையில், விருந்து வைபவங்களை நடத்தியமை தொடர்பில் பாராளுமன்றத்துக்கு பொய் கூறினார் என அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.
இவ்விடயம் தொடர்பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற குழுவானது, விருந்துபசாரங்கள் நடைபெற்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் கொவிட் தடுப்பு விதிகள் அமுல்படுத்தப்பட்டதாக பொரிஸ் ஜோன்சன் கூறியதன் மூலம் அவர் பாராளுமன்றத்தை வேண்டுமென்றே தவறாக வழிநடத்தினார் எனத் தெரிவித்திருந்தது. அவரை 90 நாட்கள் பாராளுமன்றத்திலிருந்து இடைநிறுத்துவதற்கு அக்குழு சிபாரிசு செய்திருந்தது.
இந்நிலையில் பாராளுமன்றக் குழுவின் அறிக்கை மீதான விவாதமும் வாக்கெடுப்பும் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நேற்று (20) நடைபெற்றது. இதன்போது 354 எம்.பிகள் பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். 7 பேர் மாத்திரம் எதிராக வாக்களித்தனர். பிரதமர் ரிஷி சுனாக் உட்பட 225 பேர் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை.
மேற்படி குழுவின் அறிக்கை வெளியாகுவதற்கு முன்னர், கடந்த 9 ஆம் திகதியே எம்.பி பதவியிலிருந்து பொரிஸ் ஜோன்சன் இராஜினாமா செய்திருந்தார்.
எனினும், பாராளுமன்ற வளாகத்துக்கு பிரவேசிப்பதற்கு முன்னாள் எம்.பிகளுக்கு வழங்கப்படும் விசேட அனுமதியை பொரிஸ் ஜோன்சனுக்கு வழங்கப்படக்கூடாது என்ற வேண்டும் என்ற விசாரணைக்குழுவின் சிபாரிசுக்கும் எம்.பிகள் அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.