அவுஸ்திரேலியாவின் பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவதற்கு அவுஸ்திரேலிய செனெட் அனுமதியளித்துள்ளது.
செனெட் அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து பூர்வீககுடிகளின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வது குறித்த சர்வஜன வாக்கெடுப்பு இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து பிரதமர் அன்டனி அல்பெனிஸ் சர்வஜனவாக்கெடுப்பிற்கான திகதியை அறிவிக்கவேண்டும்,இரண்டுமுதல் ஆறுமாதங்களிற்குள் அவர் சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் .
பிரதமர் ஒக்டோபரில் சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது - இதன் மூலம் 1999க்கு பின்னர் அவுஸ்திரேலிய மக்கள் முதல் தடவையாக சர்வஜனவாக்கெடுப்பில் வாக்களிப்பார்கள் - 99 இல் குடியரசு குறித்த மக்கள் கருத்துக்கணிப்பு இடம்பெற்றது அவுஸ்திரேலிய மக்கள் அதனைநிராகரித்திருந்தனர்.
பூர்வீககுடிகளின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வதற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கு அவுஸ்திரேலிய செனெட்டின் 52 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்,19 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.
சர்ஜவஜன வாக்கெடுப்பின் போது பூர்வீகமக்களின் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச்செய்யவேண்டும் என்பதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தால் அதன் பின்னர் பூர்வீக மக்களின் விவகாரங்கள் குறித்து அரசாங்கத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் ஆலோசனை வழங்குவதற்கான சுயாதீன குழுவொன்று உருவாக்கப்படும்.