அமெரிக்காவை சேர்ந்த கேத்தி செக்லருக்கு அப்போது 16 வயது. அன்றைய தினம், அவரது தோழி சொன்ன ஒரு விஷயம் தன் வாழ்வை எப்படி புரட்டிப்போட்டுவிட்டது என்பதை கேத்தி நினைவு கூர்ந்தார். அதுபற்றிப் பேசும்போது அவரது குரல் லேசாக தழுதழுத்தது.
தனக்குத் தெரிந்த லோரி பிரிட்ஸ்ல் என்ற பெண்ணின் உருவத் தோற்றம் தனது உருவத்தை ஒத்திருப்பதாக கேத்தியிடம் அவரது தோழி ஒருத்தி கூறியுள்ளார். உடனே 'அவர் தத்தெடுக்கப்பட்டவரா?' என்று தோழியிடம் கேட்ட கேத்தி, தன்னைப் போன்றே அவரும் தத்தெடுக்கப்பட்டவர் என்பதை அறிந்தார்.
கூடவே லோரியின் பிறந்த நாளை தெரிந்து கொண்ட கேத்தி, அவரது பிறந்த நாளும், தன்னுடைய பிறந்த தினமும் ஒன்றாக இருந்ததைக் கண்டு இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தார்.
உடனே சிறுமிகள் இருவரும் தொலைபேசியில் பேசிக் கொண்டனர். அப்போது அவர்கள் இரட்டை சகோதரிகள் என்பதை உணர்ந்தனர். செக்லர் தனது இரட்டை சகோதரியை முதன்முறையாகச் சந்தித்தபோது கண்ணீர் சிந்தியதை நினைவுகூர்ந்தார்.
இந்த வியக்கத்தக்க சந்திப்பில், “அவள் முகத்தில் புன்னகை தவழ்ந்ததைக் கண்டேன். பின்னர் நாங்கள் இருவரும் ஆரத் தழுவிக் கொண்டோம்,” என்று உணர்ச்சி ததும்பக் கூறினார் செக்லர்.
“தத்தெடுக்கப்பட்ட குழந்தையாக இருந்ததால், நான் எப்போதும் வித்தியாசமாகவும், தனிமையாகவும் உணர்ந்து வந்துள்ளேன். எனக்கொரு சகோதரி, தோழி இருக்கிறாள் என்பதை அறிந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்,” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார் அவர்.
இரட்டை சகோதரிகளின் ஒரே மாதிரியான இயல்புகள்
செக்லர், லோரி இருவரும் புகைப்பிடிப்பவர்களாக இருந்தனர். நடனம் மற்றும் ஓவியக் கலைகளில் ஆர்வம் கொண்டவர்களாகத் திகழ்ந்தனர். இசையிலும் அவர்கள் இருவருக்கும் விருப்பம் இருந்தது.
செக்லரை நேரில் கண்டபோது அது கனவா அல்லது நிஜமா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டதாக கூறிய லோரி, “செக்லரை கண்டபோது, கண்ணாடியில் என்னை நானே பார்த்தது போலவே உணர்ந்தேன்,” என்று வியப்புடன் கூறினார்.
சிறுமிகள் இருவரும் சுமார் 15 மைல்கள் (24 கிலோமீட்டர்கள்) தொலைவில்தான் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குப் பொதுவான குடும்ப நண்பர்களும் இருந்தனர்.
சிறு வயதில் தாங்கள் இரட்டையர்கள் என்பதை அறியாமல் வளர்ந்திருந்தாலும், அவர்களின் பெற்றோருக்கு அந்த இரட்டையர்களைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்திருந்தது. ஆனால் இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருக்கும்படி அவர்களுக்கு சொல்லப்பட்டிருந்தது.
லூயிஸ் வைஸ் சர்வீசஸ் (Louise Wise Services) நிறுவனம்
செக்லரும், லோரியும் சர்ச்சைக்குரிய ஆய்வின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளனர் என்பது சில ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்தது. 1960களில் லூயிஸ் வைஸ் சர்வீசஸ் எனும் நிறுவனம், நியூயார்க்கில் மிகவும் பிரபலமான தத்தெடுப்பு நிறுவனமாக விளங்கியது.
அந்தக் காலகட்டத்தில் பிரபல மனநல மருத்துவராக இருந்த டாக்டர் பீட்டர் பி.நியூபவர், நியூயார்க்கின் குழந்தை மேம்பாட்டு மையத்தின் யூத பாதுகாவலர் வாரியத்தின் இயக்குநராகவும் இருந்தார்.
ன்றாகப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள், தனித்தனியாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு சூழல்களில் வளரும்போது அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள், அவர்களின் அடையாளங்கள் எப்படி வரையறுக்கப்படுகின்றன என்பதை ஆராய்வதற்காக, “இரட்டையர்களின் இயற்கை மற்றும் வளர்ப்பு” எனும் ஆய்வை மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட குறைந்தபட்சம் 10 இரட்டையர்கள் மற்றும் ஒன்றாகப் பிறந்த மூன்று குழந்தைகள் (Triplets), டாக்டர் வயோலா பெர்னார்ட் வகுத்த கொள்கையின் கீழ் வேண்டுமென்றே பிரிக்கப்பட்டு, லூயிஸ் வைஸ் சர்வீசஸ் மூலம் தத்தெடுக்கப்பட்ட குடும்பங்களில் வளர்க்கப்பட்டனர்.
இந்த தத்தெடுப்பின் முக்கிய நிபந்தனையாக, இரட்டைக் குழந்தைகள் வளரும் வீடுகளுக்கு வருடத்திற்கு நான்கு முறை நேரில் சென்றுவர ஆய்வுக் குழுவால் ஒப்புக்கொள்ளப்பட்டது. அப்போது குழந்தைகளுக்கு அவர்கள் இரட்டையர்கள் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.
இதேபோன்று அவர்களைத் தத்தெடுத்த பெற்றோர்களுக்கும் முக்கியமான இந்தத் தகவல் தெரிவிக்கப்படவில்லை. மாறாக, ஆய்வின்போது, ஆராய்ச்சிக் குழுவினருக்குத் தேவைப்படும் விதத்தில் குழந்தைகளிடம் பரிசோதனைகள், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் இந்த ஆய்வுப் பணிகள் படமாக்கப்படும் நடைமுறையும் பின்பற்றப்பட்டது.
மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியலாளர்கள் குழுவுடன் இணைந்து, லூயிஸ் வைஸ் சர்வீசஸ் நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, 1960 மற்றும் 1969க்கு இடையே பிரிக்கப்பட்ட ஓர் இரட்டையர் ஜோடி தான் செக்லர் மற்றும் லோரி.
“நாங்கள் சகோதரிகளாக ஒன்றாக வளரும் வாய்ப்பை இழந்துவிட்டோம். இந்த ஏமாற்றம் ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அவர்கள் செய்தது (லூயிஸ் வைஸ் சர்வீசஸ்) மிகவும் அதிர்ச்சியூட்டும் செயல்,” என்று பிபிசி ஆவணப்பட பேட்டியில் வருத்தத்துடன் கூறியிருந்தார் செக்லர்.