பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 531 ஆப்கானிஸ்தான் அகதிகளை பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கே திருப்பி அனுப்பியுள்ளதாக தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் அகதிகள் தொடர்பான அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் தெற்கு காந்தஹார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் போல்டாக் எல்லை வழியாக ஆப்கான் அகதிகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்ததாக தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அந்த அகதிகளுக்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக சர்வதேச குடியேற்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை பெற்றுக்கொண்ட பிறகு, ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் துன்புறுத்தல் மற்றும் மரண அச்சுறுத்தல்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி, பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்புகளைத் தேடி அண்டைய நாடுகளான பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளுக்கு சென்றனர்.
கடந்த மாதங்களில் தலிபான் அதிகாரிகள் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள் ஈரான் மற்றும் துருக்கியில் இருந்து வலுக்கட்டாயமாகவோ அல்லது விருப்பத்தின் பேரிலோ நாட்டுக்குத் திரும்பி வருவதாக தெரிவித்தனர்.
இதற்கிடையில், கடந்த வாரத்தில் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து சட்டபூர்வ அனுமதி (விசா) வழங்க முடியாமல் போனதால், நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தான் பிரஜைகளை பாகிஸ்தான் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்நிலையில், சுமார் 534 ஆப்கானிஸ்தான் அகதிகள் மேற்கு ஹெராத் மாகாணத்தில் உள்ள இஸ்லாம் கலா வழியாக ஆப்கானிஸ்தானுக்கு வருகை தந்துள்ளனர்.
ஈரானிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு 2000க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் அகதிகள் நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் குறைந்தது 288 பேர் அடிப்படை தேவைகளை பெறுவதற்காகவே மீண்டும் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச இடம்பெயர்வுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.