இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கொலையை மகிமைப்படுத்தும் வகையிலான அலங்கார ஊர்தியை பொதுவெளியில் அனுமதித்ததற்காக கனடாவை இலங்கை கடுமையாக சாடியுள்ளது.
இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். தனது டுவிட்ட பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கொலையை கனடாவில் உள்ள காலிஸ்தானி தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் பகிரங்கமாக மகிமைப்படுத்தியுள்ளனர்.
"இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கருத்துச் சுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மையை மேம்படுத்துதல் என்ற பெயரில், எந்த நாடும் பயங்கரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் புகலிடங்களை வழங்க முடியாது.
பயங்கரவாதத்தை நீங்கள் அனுமதித்தால், மற்றொரு தலைமுறை இளைஞர்களை விரக்தியை நோக்கி தவறாக வழிநடத்துகிறீர்கள்” என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறினார்.
இந்திரா காந்தியின் கொலையை ஒரு குழுவினர் மகிமைப்படுத்துவதைக் காட்டும் காணொளியை அமைச்சர் மறு டுவிட் செய்துள்ளார்.
இதேவேளை, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் இருந்து சீக்கிய தீவிரவாதிகளை வெளியேற்ற இந்திய இராணுவம் நடத்திய ஆபரேஷன் புளூஸ்டாருக்கு சில மாதங்களுக்குப் பிறகு, 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் திகதி இந்திரா காந்தி புதுதில்லியில் உள்ள தனது இல்லத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
பொற்கோயில் சீக்கியர்களின் புனித தலமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.