day, 00 month 0000

கனடாவில் சிப்பி உணவில் நோய்க்கிருமிகள் அபாயம்: ஒரு எச்சரிக்கை செய்தி

கனேடியர்களுக்கு பிடித்த உணவான சிப்பி வகை உணவொன்றில் நோய்க்கிருமிகள் குறித்த எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

ஆய்ஸ்டர்ஸ் எனப்படும் சிப்பி உணவில் விப்ரியோ (Vibrio parahaemolyticus) என்னும் நோய்க்கிருமி காணப்படும் அபாயம் குறித்து உணவு பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்து பருவநிலை ஆர்வலர்கள் இன்னமும் எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அவர்களை கைது செய்யும் நிலை கூட உருவாகியுள்ளதே தவிர, அவர்கள் சொல்வதை யாரும் கேட்பதுபோல் இல்லை.

கடைசியில் அவர்கள் எச்சரித்த விடயம், சாப்பாட்டு மேசையில் வைக்கப்பட்டுள்ள உணவுத் தட்டு வரைக்கும் வந்துவிட்டது.

ஆம், விப்ரியோ என்பது, கடல் நீரில் காணப்படும் ஒரு வகை பாக்டீரியா ஆகும். பருவநிலை மாற்றத்தால் கடலின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, இந்த விப்ரியோவின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

ஆக, இதற்கு முன் பொதுவாக காணப்படாத இடங்களுக்கும் இந்த விப்ரியோ கிருமி பரவிவருகிறது.

இந்த விப்ரியோ கிருமி, கனேடியர்கள் விரும்பி உண்ணும் ஆய்ஸ்டர்கள் என்னும் சிப்பி வகை உணவில் காணப்படும் அபாயம் உள்ளது.

பலர் இந்த சிப்பி வகை உணவை பச்சையாக சாப்பிடுகிறார்கள். பொதுவாகவே பல கிருமிகள், உணவை உயர் வெப்பநிலையில் சமைக்கும்போதுதான் கொல்லப்படுகின்றன.

அப்படியிருக்கும்போது, இந்த சிப்பி உணவை பச்சையாக சாப்பிடுவது இந்த விப்ரியோ கிருமியால் உருவாகும் விப்ரியோசிஸ் என்னும் நோய்க்கு வழிவகுக்கலாம்.

ஆகவே, இந்த சிப்பி உணவை பச்சையாக சாப்பிடாமல், நன்றாக வேகவைத்து சாப்பிடுமாறு உணவுக்கலை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

பிரச்சினை என்னவென்றால், இந்த ஆய்ஸ்டர் வகை சிப்பிகள், கடல் நீரை உள்ளிழுத்து, அவற்றிலுள்ள பாசி போன்ற விடயங்களை தங்களுக்குள் தக்கவைத்துக்கொண்டு தண்ணீரை மட்டும் வெளியேற்றிவிடும். அந்த பாசியை அவை உணவாக உட்கொள்ளும்.

ஆனால், அப்படி பாசிக்காக கடல் நீரை உள்ளிளுக்கும்போது, இந்த விப்ரியோ போன்ற கிருமிகளும் சிப்பிக்குள் வந்து அப்படியே சிக்கிக்கொள்கின்றன. ஆகவேதான், அவற்றை மனிதர்கள் பச்சையாக உண்ணும்போது அவை நோய்களை உண்டுபண்ணிவிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்