// print_r($new['title']); ?>
day, 00 month 0000

‘திருச்சி என்றால் திருப்பம்’: விஜய் மாநாடு இங்குதானா? பரபரக்கும் போஸ்டர்கள்

நடிகர் விஜய்யின் பிறந்த நாள் அடுத்த மாதம் 22-ம் தேதி வருகிறது. இந்த பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதோடு இணைந்து ஒரு பெரிய மாநாட்டினை நடத்திடவும் திட்டமிட்டிருப்பதாக விஜய் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய்யின் ஒவ்வொரு அசைவையும் அவரது ரசிகர்கள் விழா போல் கொண்டாடி வருகின்றனர். இவர் சினிமாவில் நடிப்பதை தவிர அரசியலிலும் தீவிரமாக இறங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ரசிகர்களின் கனவாக இருந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு மக்கள் நலப் பணிகளை ரசிகர்கள் மூலம் நடிகர்‌‌ விஜய் அவ்வப்போது செய்து வருகிறார். அரசியலில் இறங்க முதல் படியாக டாக்டர் அம்பேத்கரின் 133-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும்‌ பல்வேறு இடங்களில் உள்ள அவருடைய ரசிகர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சமீபத்தில் பேரரசர் பெரும்பிடுகுமுத்தரையர் 1348-வது சதய விழாவில் கலந்து கொண்டும் அரசியல் கட்சியினருக்கு இணையாக விஜய் மக்கள் இயக்கத்தினர் மரியாதை செலுத்தினர்.

மேலும் 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்த மாணவியை விஜய் ரசிகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இது மட்டுமல்லாமல் ஏற்கனவே நடந்து‌ முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு புதுக்கோட்டை, ராணிப்பேட்டை உள்ளிட்ட நகராட்சிகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றியுள்ளனர்.

அதே போன்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் தனித்தோ, கூட்டணி வைத்தோ வெற்றி பெற்று அரசியலில் காலூன்ற வேண்டும் என்பதற்காக முக்கிய நகரங்களில் மாநாடு நடத்த திட்டம் உள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்த நாள் அடுத்த மாதம் 22-ம் தேதி வருகிறது. இந்த பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதோடு இணைந்து ஒரு பெரிய மாநாட்டினை நடத்திடவும் திட்டமிட்டிருப்பதாக விஜய் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை முன்னிட்டு அரசியலில் திருப்புமுனைகளுக்கு பெயர் பெற்ற திருச்சியில் அடுத்த மாதம் மாநாடு நடத்த அவரது ரசிகர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்றங்கள் சார்பாக திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பகுதியில் சுவர் விளம்பரங்களை எழுதியுள்ளனர்.

அதில் “திருச்சி என்றாலே திருப்பம் தான்.. விரைவில் மாநாடு.. காத்திருக்கு தமிழ்நாடு.. வா தலைவா.. ” தளபதியாரே என விஜய் ரசிகர்கள் அழைப்பு விடுக்கும் விதமாக சுவர் விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது.

 விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவராக இருந்த ஆர்.கே ராஜா, முன்னாள் நிர்வாகிகளான மும்பை பவுல் பாரதிராஜா‌, ஹரிஹரன்‌ உள்ளிட்ட பெயரில் இந்த சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளது.

 இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவரும், நடிகர் விஜய் தந்தையின் தீவிர விசுவாசியுமான ஆர்.கே.ராஜவிடம் பேசியபோது; நாங்கதான் முதன் முதலா அமைப்பினை வலுப்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டோம். நிறைய நலத்திட்டங்களை செய்திருக்கோம், நாங்க தூக்கி எறியப்பட்டாலும் வேறு எங்கேயும் போகல, இப்போதும், எப்போதும் இளைய தளபதி கண் அசைவுக்கு ஏற்ப பணி செய்ய காத்திருக்கின்றோம்.

வரும் மாதத்தில் இளைய தளபதியின் பிறந்தநாளையொட்டி பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருக்கு. அந்த மாநாட்டினை திருச்சியில் நடத்தினா கட்டாயம் திருப்புமுனை கிட்டும் என்பதாலேயே நாங்க மேற்கண்ட சுவர் விளம்பரங்களை எழுதியிருக்கின்றோம். அப்படி திருச்சியில் மாநாட்டினை நடத்திடும் பட்சத்தில் எங்க முழு பலத்தையும் காட்டி, முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் கொடுப்போம் என்றார்.

இவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் தற்போதைய பொறுப்பில் உள்ளவர்களிடம் பேசுகையில்; சுவர் விளம்பரங்கள் எழுதியவர்கள் யாருமே விஜய் மக்கள் இயக்கத்தில் இல்லை. ஆர்.கே.ராஜா உள்ளிட்ட அவர் தொடர்புடைய பலரும் அடிப்படை உறுப்பினர்களில் இருந்து நீக்கப்பட்டவர்கள். இதுகுறித்து தலைமைக்கு நாங்கள் எடுத்துச்சென்றுள்ளோம்.

அதேநேரம் தளபதி விஜய்யின் பிறந்தநாளில் ஒரு முக்கிய அறிவிப்பு வரும். அதன்படி நாங்கள் செயல்படுவோம். திருச்சியில் தொகுதி வாரியாகவும், வடக்கு, தெற்கு, மாநகர், புறநகர் என திருச்சி மாவட்டத்தில் 11-க்கும் மேற்பட்ட பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கடந்த சில ஆண்டுகளாகவே செய்து வருகின்றோம். இது நாங்கள் அரசியலில் இறங்கினால் இந்த களப்பணி பெரிதும் கை கொடுக்கும் என்கின்றனர் கெத்தாக.

திருச்சியில் விஜய் தலைமையில் மாநாடு நடத்த அழைப்பு குறித்து விஜய் மக்கள் இயக்க தலைமையிலிருந்து எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்