cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை: 70 வருடங்களுக்குப் பிறகு இணைந்த அக்கா-தம்பி

இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்த உடன்பிறப்புகள் அஜீஸ், கவுர் 70 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானின் கர்தார்பூரில் சந்தித்து மகிழ்ந்தனர்.

இந்தியா- பாகிஸ்தான் போர் ஏற்பட்டு இரு நாடுகளாக பிரிந்தது. இந்த பிரிவினையின் போது உயிரிழப்புகள் ஏற்பட்டது, பலர் தங்களது உறவுகளை தொலைத்தனர். அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிவினையின் போது பிரிந்த அக்கா, தம்பி 70 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் சந்தித்த தருணம் உணர்வுபூர்வமாக இருந்தது. அவர்கள் ஒருவரையொருவர் ஆரத் தழுவி கட்டியணைத்து, ஆனந்தக் கண்ணீர் விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது. குருத்வாரா ஸ்ரீ கர்தார்பூர் சாஹிப் என்ற இடத்தில் இருவரின் குடும்பத்தினரும் சந்தித்தனர்.

மகிந்தர் கவுர் (81) மற்றும் அவரது குடும்பத்தினர் இந்தியாவில் இருந்து குருத்வாரா தர்பார் சாஹிப் கர்தார்பூர் சாஹிப் என்ற இடத்திற்கு கர்தார்பூர் காரிடார் வழியாக பயணம் செய்தனர். ஷேக் அப்துல்லா அஜீஸ்(78) மற்றும் அவரது குடும்பத்தினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்தனர்.

பிரிவினைக்கு முன் இந்தியாவில் இருந்து வந்த அவர்கள், தங்கள் பெற்றோரை இழந்த சோகத்தைப் பகிர்ந்துகொண்டு ஒருவரையொருவர் கட்டித்தழுவினர். பிரிவினையின் போது, ​​பஞ்சாப்பின் இந்தியப் பகுதியைச் சேர்ந்த சர்தார் பஜன் சிங்கின் குடும்பம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு இடம் பெயர்ந்தனர். அவரது மற்ற குடும்ப உறுப்பினர்கள் இந்தியாவில் தங்கினர்.

அஜீஸ் இளம் வயதில் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களை மீண்டும் சந்திக்க வேண்டும் என்றும் அவர் ஏங்கினார் என்று அஜீஸின் குடும்ப உறுப்பினர் இம்ரான் ஷேக் கூறினார்

அஜீஸ் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கு இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டார். சமூக ஊடகங்களில் தன் குடும்பம் குறித்து பகிர்ந்தார். இதன் மூலம் இரு குடும்பத்தினரும் தங்கள் தொடர்பைக் கண்டுபிடித்தனர், மற்றும் கவுர் மற்றும் அஜீஸ் உடன்பிறந்தவர்கள் என்பதை உணர்ந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை, கவுரும் அஜீஸும் சக்கர நாற்காலியில் கர்தார்பூர் காரிடாருக்கு வந்தனர். இருவரும் உணர்ச்சிவசம் பட்ட நிலையில் அக்கா- தம்பி பாசத்தை வெளிப்படுத்தினர். குடும்ப உறுப்பினர்கள் பாடல்கள் பாடியும், மலர் தூவியும் மகிழ்ந்தனர்.

இரு குடும்பத்தினரும் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பிற்கு சென்று சுற்றிப் பார்த்தனர். அருகருகே அமர்ந்து உணவைப் பகிர்ந்து கொண்டனர். பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.

மகிழ்ச்சியான சந்திப்பை தொடர்ந்து, கர்தார்பூர் நிர்வாகம் இரு குடும்பத்தினரையும் மாலை அணிந்து வரவேற்று இனிப்புகளை வழங்கியது.

கவுர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். மக்களை ஒன்றிணைப்பதில் கர்தார்பூர் காரிடரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் பிரிந்த குடும்பங்களை மீண்டும் இணைக்க இந்த வழித்தடம் தொடரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் குடியேறிய அஜீஸ் இஸ்லாத்தை பின்பற்றுகிறார். தங்கள் குடும்பத்தினரும் மதம் மாறியதாக கூறினார்.

கர்தார்பூர் காரிடர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப், சீக்கிய மத குரு குருநானக் தேவின் இறுதி ஓய்விடமாகும். இது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் ஆலயத்தையும் இணைக்கிறது.

4 கிமீ நீளமுள்ள காரிடர் தர்பார் சாஹிப்பைப் பார்வையிட இந்திய சீக்கிய யாத்ரீகர்களுக்கு விசா இல்லாத அணுகலை இந்திய அரசு வழங்குகிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்