day, 00 month 0000

ரொக்கெட்டில் பறந்த முதல் அரபுப் பெண் - சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைவு

சவுதி அரேபியாவின் முதல் பெண் விண்வெளி வீரருடன், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் ராக்கெட், சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளது.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த, 'ஆக்சியாம் ஸ்பேஸ்' என்ற நிறுவனம், விண்வெளி வீரர்கள் அல்லாத சாமானியர்களையும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு  அழைத்து செல்லும் சுற்றுலாவை நடத்துகின்றது.

கடந்த ஆண்டு நடந்த சர்வதேச விண்வெளி நிலைய பயணத்தில், ஓய்வு பெற்ற நாசா விண்வெளி வீரருடன், முதல்முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று தொழிலதிபர்கள் பயணித்துள்ளனர்.

இந்த ஆண்டுக்கான பயணத்திற்கு , சவுதி அரேபிய அரசு நிதியுதவி வழங்கியுள்ளது.

அந்நாட்டைச் சேர்ந்த மார்பக புற்றுநோய் ஆய்வாளரான ரயானா பர்னாவி என்ற பெண்ணும், சவுதி போர் விமான பைலட்டான அலி அல்குவார்னி என்ற நபரும் இந்த பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன், அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தைச் சேர்ந்த ஜான் ஷாப்னர் என்ற தொழிலதிபரும், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் முன்னாள் விண்வெளி வீராங்கனையுமான பெக்கி விட்சன் ஆகியோரும் இந்த பயணத்தில் இடம் பெற்றுள்ளனர்.

'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்துக்கு சொந்தமான, 'பால்கன் 9' ராக்கெட்டில் இவர்கள் நால்வரும் புறப்பட்டனர்.

அமெரிக்காவின் கேப் கனாவெரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, அந்நாட்டு நேரப்படி நேற்று முன்தினம் மாலை 5:37 மணிக்கு ராக்கெட் புறப்பட்டது. அவர்கள் நேற்று காலை சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை சென்றடைந்துள்ளனர்.

அவர்கள் அங்கு ஒரு வாரம் தங்கியிருந்த பின்னர்  பூமிக்கு திரும்பவுள்ளனர்.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த இளவரசர், 1985ல், 'டிஸ்கவரி' விண்கலத்தில் விண்வெளிக்கு பயணம் செய்ததையடுத்து, சவுதியில் இருந்து விண்வெளிக்கு பயணிக்கும் நபர்கள் என்ற பெருமையை இந்த இருவரும் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்