cw2
அவுஸ்திரேலியா அரசு வெளியிட்டுள்ள போர் நினைவு நாணயத்திற்கு வியட்நாம் கம்யூனிஸ்ட் அரசு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
தெற்கு வியட்நாமில் இருந்து ஆஸ்திரேலிய படைகள் வெளியேறியதன் 50 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் ராயல் ஆஸ்திரேலியன் மின்ட் 85,000 தங்கம் மற்றும் வெள்ளி $2 நாணயங்களை வெளியிட்டிருந்தது.
தெற்கு வியட்நாமின் மஞ்சள் மற்றும் சிவப்புக் கொடிக்கு வியட்நாம் அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில், வியட்நாம் அரசால் தடை விதிக்கப்பட்ட அம்சங்களை குறித்த நாணயம் உள்ளடக்கியதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இதற்கு, ” ராயல் ஆஸ்திரேலியன் மின்ட் மற்றும் ஆஸ்திரேலியா போஸ்ட்டில் மஞ்சள் கொடியின் படத்தை வெளியிட்டதற்காக வருந்துவதுடன், அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிடுவதாகவும் ” வியட்நாம் வெளியுறவு அமைச்சகத்தின் துணை செய்தித் தொடர்பாளர் பாம் து ஹாங் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் வியட்நாம், ஆஸ்திரேலிய அரசுடன் பேச்சு நடத்தும் எனவும், நாணயங்களின் புழக்கத்தை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அந்த நாணயத்தின் முகப்பில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவப் படமும், பின்புறத்தில் ஹெலிகாப்டரின் உருவமும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.