கணினியில் நீங்கள் பார்க்கும் திரைப்படங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் தரவு மையத்தின் சேவையகங்களில் சேமிக்கப்படும்.
இந்தத் தரவுச் சேவையகங்கள் மற்றும் மையங்கள் கிளௌட் ஸ்டோரேஜ் என்று அழைக்கப்படுகின்றன. இங்கு சேமிக்கப்படும் தரவு இணையம் மூலம் உங்கள் மொபைல் போன் அல்லது கணினியைச் சென்றடைகிறது.
இதேபோல், உங்கள் தரவுகளும் இந்த கிளௌட் ஸ்டோரேஜ்களில் சேமிக்கப்பட்டு, நீங்கள் விரும்பும் போதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.
சாதாரண மக்களாக இருந்தாலும் சரி, பெரிய நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தங்கள் தரவை இந்த கிளௌட் ஸ்டோரேஜ்களில் சேமித்து வைக்கிறார்கள். நிறுவனங்களின் தரவுகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்த கிளௌட் சர்வர்களில் சேமிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த தொழில்நுட்பம் மீதான நிறுவனங்களின் சார்பு அதிகரித்து வருகிறது.
உங்கள் மொபைல் ஸ்டோரேஜில் மெமரி ஸ்பேஸ் நிரம்பியவுடன், அதை கிளௌடில் கட்டணம் செலுத்தி சேமித்து, இணையம் வழியாக எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
ஆனால் ஜனவரி 25 அன்று, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல கிளௌட் சேவைகள் உலகம் முழுவதும் தொண்ணூறு நிமிடங்களுக்கு முடங்கிவிட்டிருந்தன. இது உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் மற்றும் அதன் வாடிக்கையாளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
கிளௌட் டேட்டா சர்வரில் ஏற்பட்ட கோளாறு தான் இதற்குக் காரணம் எனப் பின்னர் தெரியவந்தது. ஆனால், நம் கணினிகளில் மெமரி ஸ்பேஸ் நிரம்பி விடுவதைப் போல, கிளௌட் ஸ்டோரேஜும் நிரம்பிவிட வாய்ப்புண்டொ என்று பலர் அச்சம் கொள்ளத் தொடங்கினர்.
இந்த வாரம் இந்தக் கேள்விக்கான பதிலை அறிய முயற்சிப்போம்.
கிளௌட் ஸ்டோரேஜ் என்பது என்ன?
கிளௌட் ஸ்டோரேஜ் பற்றி விரிவாகப் புரிந்துகொள்ள, தொழில்நுட்ப நிறுவனமான ஐஎஸ்ஜியின் ஆலோசகராக இருக்கும் ஓலா ஷாவ்னிங்கிடம் பேசினோம்.
அவர், "நான் எனது மொபைல் ஃபோன் அல்லது டேப்லெட்டில் உள்ள படத்தைக் கிளிக் செய்து, எனது தொலைபேசியில் சேமிக்கப்பட்ட புகைப்படத்தைப் பார்க்கும்போது, அது உண்மையில் இணையம் வழியாக ரிமோட் கிளௌடிலிருந்து எனது மொபைலை வந்தடைகிறது என்பது கூட எனக்குத் தெரியாது." என்று கூறுகிறார்.
1980 களில் கணினிகளைப் பயன்படுத்தியபோது, ஃப்ளாப்பி டிஸ்க்குகள் மற்றும் பிற சேமிப்பக சாதனங்களில் நமது தரவைச் சேமித்து, பின்னர் அவற்றை நமது கணினிகளில் சேமிக்கத் தொடங்கினோம்.
ஆனால் 1990 களில் இணையத்தின் வருகைக்குப் பிறகு, தொழில்நுட்பம் மேலும் வளர்ந்தது. மக்கள் தங்கள் கணினிகளுக்குப் பதிலாக வேறு வெளி இடங்களில் தங்கள் தரவைச் சேமிக்கத் தொடங்கினர்.
ஓலா ஷாவ்னிங் மேலும், “இணையத்தின் காரணமாக, நமது மேசை மீதுள்ள கணினிகளை மற்ற இடங்களில் அமைந்துள்ள தரவு மையங்களுடன் இணைக்க முடிந்தது. உண்மையில் இந்த கிளௌட் ஒரு வகையான இணைய வசதியாகும்; இதன் மூலம் பல சாதனங்களை இணைத்துத் தரவுப் பரிமாற்றம் சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது.” என்கிறார்.
பிபிசி நிருபர்கள் நார்வேயில் உள்ள ஒரு பெரிய நிலத்தடி தரவு மையத்திற்கும் சென்று பார்வையிட்டனர். அவர்கள், "இங்கு வெப்பநிலை அதிகமாக உள்ளது. காரணம், 40 தரவுச் சேவையகங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. அவற்றால் இங்கு அதிக வெப்பம் வெளியாகிறது. மேலும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான தரவுச் சேவையகங்கள் கீழ்த் தளத்தில் பணியாற்றுகின்றன" என்று கூறினர்.
நிலம் மலிவான இடங்களில் நிறுவனங்கள் தங்கள் தரவுச் சேவையகங்களை அமைக்கத் தொடங்கின. அவர்கள் பிரமாண்டமான தரவு மையங்களை உருவாக்கி, தங்களுக்குத் தேவையானதை விட அதிக சேமிப்புத் திறன் இருப்பதைக் கண்டறிந்தனர்.
கிளௌட் ஸ்டோரேஜ் தொடங்கியது எப்படி?
இதுபற்றி ஓலா ஷாவ்னிங் கூறும்போது, "இந்தக் கூடுதல் சேமிப்பகத்தை மற்ற நிறுவனங்களுக்கு ஏன் விற்கக்கூடாது அல்லது வாடகைக்கு விடக்கூடாது என்று இந்த நிறுவனங்கள் சிந்தித்தன. இந்த நிறுவனங்கள் தங்கள் டேட்டா ஸ்டோரேஜை விற்கவோ அல்லது வாடகைக்கு எடுக்கவோ தொடங்கியபோது, கிளௌட் ஸ்டோரேஜ் என்ற தொழில்நுட்பம் தொடங்கியது.
"இந்த நிறுவனங்கள் கிளவுட் ஸ்டோரேஜ் வழங்குநர்கள் அல்லது ஹைப்பர் ஸ்கேலர்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் உலகெங்கிலும் உள்ள பெரிய தரவு மையங்களை உருவாக்கி, மற்ற நிறுவனங்கள் மற்றும் சாதாரண மக்களுக்குக் கூடத் தங்கள் தரவு இடத்தை வாடகைக்கு விடுகின்றன."
முதல் பெரிய ஹைப்பர்-ஸ்கேலர் நிறுவனம் அமேசான் ஆகும், இது 2006 இல் அமேசான் வலைச் சேவைகளை அறிமுகப்படுத்தியது. விரைவில் பல தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் கிளௌட் சேவைகளைத் தொடங்கின.
இப்போது கிளௌட் சேவைச் சந்தை ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர்கள் மதிப்புடையது. வரும் பத்து ஆண்டுகளில் எட்டு மடங்கு அதிகரிக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
"எதிர்காலத்தில் நமக்கு எவ்வளவு கம்ப்யூட்டிங் ஆற்றல் அல்லது தரவுச் சேமிப்பு தேவைப்படும் என்று ஆரம்பத்தில் எங்களுக்குத் தெரியாது. குறுகிய காலத்தில் தேவைக்கு ஏற்ப இந்தத் திறனை அதிகரிக்க விரும்புகிறேன்."
"இந்த திறனை நான் எனது வீடு அல்லது அலுவலகத்திற்கு விரிவுபடுத்த வேண்டுமானால், அதற்கு சக்திவாய்ந்த கணினி உபகரணங்கள், மென்பொருள் மற்றும் சேமிப்பக உபகரணங்களை வாங்க வேண்டும், அதற்குக் கால தாமதம் ஆகும்."
"ஆனால் நான் ஹைப்பர் ஸ்கேலர் அல்லது கிளௌட் பயன்படுத்தினால், நான் பெரிய முதலீடு செய்ய வேண்டியதில்லை. அதே சமயம், எனக்குத் தேவையான இடம் மற்றும் கம்ப்யூட்டிங் ஆற்றலுக்கு மட்டுமே நான் பணம் செலுத்துகிறேன். இதில் செலவும் குறைவு,எளிமையானதும் கூட” என்று ஓலா ஷாவ்னிங் விளக்குகிறார்.
கிளௌட் ஸ்டோரேஜ் தொடங்கியது எப்படி?
இதுபற்றி ஓலா ஷாவ்னிங் கூறும்போது, "இந்தக் கூடுதல் சேமிப்பகத்தை மற்ற நிறுவனங்களுக்கு ஏன் விற்கக்கூடாது அல்லது வாடகைக்கு விடக்கூடாது என்று இந்த நிறுவனங்கள் சிந்தித்தன. இந்த நிறுவனங்கள் தங்கள் டேட்டா ஸ்டோரேஜை விற்கவோ அல்லது வாடகைக்கு எடுக்கவோ தொடங்கியபோது, கிளௌட் ஸ்டோரேஜ் என்ற தொழில்நுட்பம் தொடங்கியது.
"இந்த நிறுவனங்கள் கிளவுட் ஸ்டோரேஜ் வழங்குநர்கள் அல்லது ஹைப்பர் ஸ்கேலர்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் உலகெங்கிலும் உள்ள பெரிய தரவு மையங்களை உருவாக்கி, மற்ற நிறுவனங்கள் மற்றும் சாதாரண மக்களுக்குக் கூடத் தங்கள் தரவு இடத்தை வாடகைக்கு விடுகின்றன."
முதல் பெரிய ஹைப்பர்-ஸ்கேலர் நிறுவனம் அமேசான் ஆகும், இது 2006 இல் அமேசான் வலைச் சேவைகளை அறிமுகப்படுத்தியது. விரைவில் பல தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் கிளௌட் சேவைகளைத் தொடங்கின.
இப்போது கிளௌட் சேவைச் சந்தை ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர்கள் மதிப்புடையது. வரும் பத்து ஆண்டுகளில் எட்டு மடங்கு அதிகரிக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
"எதிர்காலத்தில் நமக்கு எவ்வளவு கம்ப்யூட்டிங் ஆற்றல் அல்லது தரவுச் சேமிப்பு தேவைப்படும் என்று ஆரம்பத்தில் எங்களுக்குத் தெரியாது. குறுகிய காலத்தில் தேவைக்கு ஏற்ப இந்தத் திறனை அதிகரிக்க விரும்புகிறேன்."
"இந்த திறனை நான் எனது வீடு அல்லது அலுவலகத்திற்கு விரிவுபடுத்த வேண்டுமானால், அதற்கு சக்திவாய்ந்த கணினி உபகரணங்கள், மென்பொருள் மற்றும் சேமிப்பக உபகரணங்களை வாங்க வேண்டும், அதற்குக் கால தாமதம் ஆகும்."
"ஆனால் நான் ஹைப்பர் ஸ்கேலர் அல்லது கிளௌட் பயன்படுத்தினால், நான் பெரிய முதலீடு செய்ய வேண்டியதில்லை. அதே சமயம், எனக்குத் தேவையான இடம் மற்றும் கம்ப்யூட்டிங் ஆற்றலுக்கு மட்டுமே நான் பணம் செலுத்துகிறேன். இதில் செலவும் குறைவு,எளிமையானதும் கூட” என்று ஓலா ஷாவ்னிங் விளக்குகிறார்.
கிளௌட் கம்பெனிகள்
மைக்ரோசாப்ட், கூகுள் மற்றும் அமேசான் ஆகிய மூன்று பெரிய கிளௌட் கம்ப்யூட்டிங் மற்றும் சேமிப்பக நிறுவனங்களிடம் தான் உலகின் மொத்த கிளௌட் வருவாயில் 75 சதவிகிதம் இருக்கிறது. இதில் மூன்றில் ஒரு பங்கைத் தன்னகத்தே கொண்டுள்ள அமேசான் இவற்றில் முன்னிலை வகிக்கிறது.
அமேசான் 1995 இல் இணையம் மூலம் புத்தகங்களை விற்பனை செய்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் பின்னர் அது விரிவடைந்து பல வகையான தயாரிப்புகளை விற்கத் தொடங்கியது.
இதற்காக, அந்நிறுவனம், பெரிய தரவு மையங்களை உருவாக்கியதுடன், அதிகப்படியானவற்றை மற்ற நிறுவனங்களுக்கு விற்கவோ அல்லது வாடகைக்கு விடவோ தொடங்கியது.
எம்ஐடி டெக்னாலஜி ரிவியூவின் ஆசிரியர் லாரல் ரூமா, "அமேசான் விரிவடைந்ததும் நுகர்வோர் பொருட்களுடன் கம்ப்யூட்டிங் மற்றும் கிளௌட் ஸ்டோரேஜை மற்ற நிறுவனங்களுக்கு விற்கத் தொடங்கியது." என்று கூறுகிறார்.
"அதன் வெற்றியைப் பார்த்து, மற்ற நிறுவனங்களும் இதைப் பின்பற்ற விரும்பின. மெல்ல, அமேசானின் முக்கிய வணிகமாக இது மாறத் தொடங்கியது”
கூகுளும் சளைத்ததில்லை
"கூகுள் போன்ற பிற சிலிக்கான் வேலி நிறுவனங்களும் இதில் சளைக்கவில்லை. கிளௌட் சேவைச் சந்தையில் கூகுள் எப்போதுமே நல்ல நிலையில் உள்ளது. இதேபோல் மைக்ரோசாப்ட் நிறுவனம், மின்னஞ்சல் மற்றும் பிற ஆன்லைன் சேவைகளை வழங்கிவந்த நிலையில், பல நிறுவனங்கள் இயற்கையாகவே கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் கம்ப்யூட்டிங்கிற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவைகளைப் பயன்படுத்தத் தொடங்கின.”
தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறையின் உள்கட்டமைப்பில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கிளௌட் கம்ப்யூட்டிங் மற்றும் ஸ்டோரேஜ் அதிகரித்துள்ளதாகவும் லாரல் ரூமா கூறினார்.
"இப்போது பலர் தங்கள் பெரும்பாலான வேலைகளை ஆன்லைனில் செய்கிறார்கள், இந்தத் துறை விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால் அதற்கு உள்கட்டமைப்பு மற்றும் பிற வளங்களில் அதிக முதலீடு தேவைப்படுகிறது. அப்படியிருக்க, மிகவும் வளர்ந்த நாடுகளில் இந்த வளர்ச்சி வெற்றிகரமாக ஏற்பட்டுள்ளதா?” என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவரது பதில், “தொலைதொடர்பு தொழில்நுட்பம் மற்றும் கல்வித் துறையில் வளர்ந்த அல்லது அதிக எண்ணிக்கையிலான பயிற்சி பெற்றவர்கள் பணிபுரியும் நாடுகளின் வளர்ச்சியில் இது நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கங்கள் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து அதைப் பயன்படுத்தினால், அங்குள்ள சமூகமும் அதில் அதிக பயிற்சி பெறும்."
முன்னெப்போதும் விட நிறுவனங்கள் தங்கள் கணினி திறனை அதிகரிப்பது இப்போது எளிதாகவும் மலிவாகவும் உள்ளது.
ஆனால் ஒரு கேள்வி மிகவும் முக்கியமாக எழுகிறது. இந்த நிறுவனங்கள் கிளௌடில் சேமிக்கும் தரவு எப்போதும் எளிதாக அணுகக்கூடியதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறதா?
பாதுகாப்பே முக்கிய கேள்வி
கிளௌட் ஸ்டோரேஜில் சேமிக்கப்படும் தரவுகளின் பாதுகாப்புச் சிக்கல்களைப் புறக்கணிக்க முடியாது.
இது குறித்து எடின்பர்க் நேப்பியர் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பேராசிரியர் பில் புக்கானன் கூறுகையில், “கிளௌட் ஸ்டோரேஜில் தேவையான தரவுகளை மட்டுமே வைத்திருக்க வேண்டும். மேலும் நமது தரவை எந்த கிளௌடில் வேண்டுமானால் சேமித்து வைப்பதும் சாத்தியமில்லை. பல நாடுகளில் தரவுகளைப் பயன்படுத்துவது தொடர்பான தனிச் சட்டங்கள் உள்ளன.
2018 ஆம் ஆண்டில் தரவு தனியுரிமை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட ஜிடிபிஆர் (GDPR) சட்டம் மிகவும் கடுமையானது. ஐரோப்பாவிலும் ஐரோப்பாவிற்கு வெளியேயும் உள்ள நிறுவனங்கள் சாதாரண மக்களின் தனிப்பட்ட தரவை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இது முடிவு செய்கிறது.
அந்தந்தப் பிராந்தியத்தின் தரவு தனியுரிமைச் சட்டங்களைப் பின்பற்றும் தரவு மையங்கள் உலகெங்கிலும் உள்ளன, ஆனால் ஒரு பிராந்தியத்தில் உள்ளவர்களின் தரவு மற்றொரு பிராந்தியத்தில் உள்ள நிறுவனங்கள் அல்லது மக்களின் கைகளுக்குச் செல்லும் அபாயம் உள்ளது. அது தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது." என்று விவரிக்கிறார்.
அதாவது ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் தரவுகள் அந்தப் பகுதியிலேயே சேமிக்கப்பட வேண்டும் ஆனால் அவ்வாறு செய்தால் கூட பிரச்சனை தீர்ந்து விடும் என்று கூறுவதற்கில்லை.
2021 ஆம் ஆண்டின் கடைசி மாதங்களில், அமேசான் இணையச் சேவை பலமுறை முடங்கியது. டிசம்பர் 7 ஆம் தேதி, வர்ஜீனியாவில் மென்பொருள் பிரச்சனையால் அமேசான் இணையதளச் சேவை ஸ்தம்பித்தது.
அமேசான் டெலிவரி சேவை பல இடங்களில் முடங்கியது மட்டுமின்றி டிஸ்னி என்டெர்டெய்ன்மென்ட், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற பல இணையதளங்களும் முடங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது அமேசான் தனது டேட்டா சென்டர்களில் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவிருப்பதாகக் கூறியது.
இரண்டாவது கேள்வி என்னவென்றால், தரவுகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்பப்படும் போது, எந்த நாடுகள் வழியாக அனுப்பப்படுகிறது? இதற்கிடையில் அது தவறான நபர்களின் கைகளில் சிக்க முடியுமா?
இதற்குப் பதிலளித்த பில் புக்கனன், “இது முற்றிலும் சாத்தியம். அப்படி நடந்தால் அதைக் கண்டறிவதில் அதிக காலம் பிடிக்கும்.” என்று எச்சரிக்கிறார்.
மேலும் அவர், "இணையம் தன்னாட்சி முறையில் இயங்குகிறது. இணையம் உருவானபோது இந்தச் சிக்கலையெல்லாம் சிந்திக்கவில்லை. இணையம் இப்போது உருவாக்கப்பட்டிருந்தால் அதன் வடிவம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்திருக்கும்." என்று கூறுகிறார்.
கிளௌடின் பயன்பாடு அதிகரித்து வருவதால், தரவுகள் தொலைதூர மையங்களில் சேமிக்கப்படுவதால், தேவைப்படும்போது உடனடியாகக் கிடைக்காத அபாயமும் அதிகரித்துள்ளது என்று பில் புக்கனன் கூறுகிறார்.
இந்த அச்சுறுத்தல்களைப் பற்றி, மேலும் கூறும் அவர், "இப்போது நாம், பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமான தரவுகளைக் கூட கிளௌட் ஸ்டோரேஜில் சேமித்து வருகிறோம். விமானங்களின் கட்டுப்பாட்டுத் தரவு, அல்லது இராணுவ நிறுவனங்களின் தரவு போன்றவை உதாரணங்கள். இது ஆபத்தானது, வானத்திலிருந்து விமானங்கள் கீழே விழுந்து உயிர்ச் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு. திட்டங்கள் நின்று போகலாம். எனவே நிறுவனங்கள் பொது கிளௌட் ஸ்டோரேஜில் இதுபோன்ற முக்கியத் தரவைச் சேமிப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் அவற்றைச் சமாளிப்பதற்கான வழிகளையும் பற்றிச் சிந்திக்க வேண்டும்." என்று எச்சரிக்கிறார்.
அடுத்ததாக, பில் புக்கனன், "அமேசான் போன்ற தரவு சேமிப்பு நிறுவனம் ஸ்தம்பித்துவிட்டால், அதன் தரவு மையத்தின் தரவு எவ்வாறு வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். உலகின் பொருளாதாரத்தில் மூன்றில் இரண்டு பங்கு, டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில் தொடர் தரவுப் பரிமாற்றமும் அதிகரித்து வருகிறது.” என்கிறார்.
மின்னஞ்சலைப் பொருத்தவரை, ஒவ்வொரு நாளும் சுமார் முந்நூறு பில்லியன் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன.
எல்லாமே டிஜிட்டல்தான் ஆனால் சுற்றுச்சூழலில் இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று அர்த்தம் இல்லை.
கிளௌட் சுற்றுச் சூழலுக்கு ஏற்றதா?
எம்மா ஃபிட்ஸ்ஜெரால்ட் ஸ்வீடனில் உள்ள லூண்ட் பல்கலைக்கழகத்தில் ஐடி மற்றும் எலக்ட்ரிக் நெட்வொர்க்குகளின் பேராசிரியராக உள்ளார். உலகின் மொத்த கார்பன் உமிழ்வில் மூன்று சதவிகிதம் கிளௌட் கம்ப்யூட்டிங் மற்றும் ஸ்டோரேஜால் ஏற்படுகிறது என்றும் இது பயணிகள் விமானத்தில் இருந்து வெளியிடப்படும் கார்பன் உமிழ்வுடன் ஒப்பிடலாம் என்றும் அவர் கூறுகிறார்.
பிபிசியிடம் பேசிய எம்மா ஃபிட்ஸ்ஜெரால்ட், "கணினிகள் மின்சாரத்தில் இயங்குவதோடு வெப்பத்தையும் உருவாக்குகின்றன. தவிர, வெப்பமான சூழல்களில் அவை செயலிழக்கவும் கூடும். எனவே அவை குளிர்ச்சியாக வைத்திருக்கப்பட வேண்டும். இவற்றின் செயல்பாட்டுக்கும் குளிர்விப்பதற்கும் தேவையான மின் ஆற்றலைக் கணக்கில் கொண்டால், அது சுற்றுச்சூழலைப் பெருமளவில் பாதிக்கிறது.” என்று கூறினார்.
“இரண்டாவதாக, இந்தத் தரவு மையங்களில் மின்சாரம் தடைபட்டால், அதை இயங்க வைக்க ஒரு காப்பு அமைப்பு தேவைப்படுகிறது, மேலும் இந்தக் காப்பு சக்தியானது டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்களில் இருந்து வருகிறது. இதற்குத் தேவையான காப்பு அமைப்புகள் அசல் சக்தி ஆதாரங்களை விட சுற்றுச்சூழலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும்." என்றும் அவர் விளக்குகிறார்.
டேட்டா சென்டர் நிறுவனங்களும் தங்களது மின் கட்டணம் குறைவாக இருக்க வேண்டும் என விரும்பி அதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்றன. உதாரணமாக, சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக், வடக்கு ஸ்வீடனில் தனது தரவு மையங்களை அமைத்துள்ளது. இது குறித்து விளக்குகிறார் எம்மா ஃபிட்ஸ்ஜெரால்ட்: "ஆண்டு முழுவதும் வானிலை குளிர்ச்சியாக இருப்பதால் குளிரூட்டலுக்குச் செலவில்லை. மேலும், தரவு மையத்தில் இருந்து உருவாகும் வெப்பம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சக்தியாக மாற்றப்படுகிறது."
"கணினிகளில் பயன்படுத்தப்படும் ஆற்றலைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக மாற்ற இது ஒரு நல்ல வழி. இல்லையெனில், சுற்றுச் சூழலை மோசமாக பாதிக்கக்கூடிய தரவு மையங்களையே இந்த நிறுவனங்கள் உருவாக்கும்”
இந்த நேரத்தில், உலகில் தரவு சேமிப்பகத்திற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீடியோ கோப்புகளின் பயன்பாடு அதிகரித்து வருவது இதற்கு ஒரு முக்கிய காரணம். அதே நேரத்தில், ஆக்மென்டட் ரியாலிட்டி உள்ளடக்கத்தின் அதிகரிப்புடன், தரவு சேமிப்பகத்தின் தேவை மேலும் அதிகரிக்கும்.
இப்போது மீண்டும், கிளவுட் ஸ்டோரேஜ் பற்றாக்குறை ஏற்படுமா என்ற தொடக்கக் கேள்விக்கு வருவோம். இப்போதைக்கு, தொழில்நுட்பம் மேலும் வளர வளர, அதன் வடிவம் சிறியதாகிவிடும் என்றே தோன்றுகிறது.
எனவே நிலம் அல்லது உபகரணங்களுக்கு பற்றாக்குறை இருக்காது. தேவைக்கேற்ப, பெரிய தரவு மையங்கள் தொடர்ந்து கட்டப்படும். ஆனால் இதற்குத் தேவைப்படும் ஆற்றல் சுற்றுச்சூழலில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான் கவலைக்குரிய விஷயம்.
எம்மா ஃபிட்ஸ்ஜெரால்ட் கூறுகிறார், "இந்த கவலையைத் தீர்க்க, ஒவ்வொருவரும், குறிப்பாக, பெரிய நிறுவனங்கள் தங்கள் சேமிப்பு மற்றும் கணினி தேவைகளைப் பற்றிச் சிந்திப்பதுடன் சுற்றுச் சூழல் மீதான இவற்றின் சுமை கட்டுப்படுத்தப்படும் வகையில் வழிகளைக் கண்டறிய வேண்டும்”