இலங்கையானது பண்டையகாலம் முதல் தமிழ் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்த தன்னிடம் சாட்சியங்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எப்போதும் தான் இனவாதத்தை தூண்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது தான் ஆற்றிய உரை தொடர்பான ஒவ்வொருவர் பல்வேறு விதமான கருத்துக்களை கூறினாலும் தான் கூறியதை சாட்சியங்களுடன் ஒப்புவிக்கவும் அது தொடர்பான விடயங்களை தெளிவுப்படுத்தவும் தயாராக இருப்பதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமிழ் மக்களின் சார்பில் குரல் கொடுக்க தனக்கு உரிமை இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
9ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தில் தனது கன்னி உரையை நிகழ்த்திய நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன், இலங்கையின் பூர்வ குடிகள் தமிழ் மக்கள் எனவும் தமிழ் மொழி உலகில் அழியாது பேசப்பட்டு வரும் பழமையானது மொழி எனவும் கூறியிருந்தார்.