மோடியின் அழுத்தமும் மகிந்தவின் மழுப்பலும்

Read Time:13 Minute, 7 Second
மோடியின் அழுத்தமும் மகிந்தவின் மழுப்பலும்

வித்தகன்

கோத்தபாய – மஹிந்த அரசாங்கம் 20ஆவது அரசியலமைப்புத்திருத்தம், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஒழிப்பு, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்ற மூன்று விடயங்களை முன்வைத்து சிங்கள மக்களுக்கு மூளைச்சலவை செய்து பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுவிட்டபோதும் இம்மூன்று விடயங்களில் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தவிர ஏனைய இரண்டிலும் ஆப்பிழுத்த குரங்கின் நிலைமைக்கே தள்ளப்பட்டுள்ளது.
சிங்கள, தமிழ், முஸ்லிம் எதிர்க்கட்சிகள், ஜனநாயக அமைப்புக்கள், பொதுஅமைப்புக்கள் உள்ளிட்ட பல தரப்புக்களின் கடும் எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் கடந்த 22ஆம் திகதி ஜனாதிபதியிடம் அதிகாரங்களைக் குவிக்கும் ராஜபக்ச குடும்பத்திற்கான 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கோத்தபாய – மஹிந்த அரசு சமர்ப்பித்துவிட்ட நிலையில் அதற்கெதிராக 39 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், தனிநபர்களினால் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்துக்காக 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் காத்திருக்கின்றது.
அதேவேளை புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என சிங்கள மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதனை அரசு இரண்டு வருடங்களுக்கு பிற்போட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை – இந்திய உடன்படிக்கையின்படி உருவான, மாகாண சபைகளுக்கும் தமிழ்பேசும் மக்களுக்கும் ஓரளவுக்கு நன்மையளிக்கக்கூடிய 13ஆவது திருத்தத்தை ஒழித்துவிட வேண்டுமென்பதில் கோத்தபாய – மஹிந்த அரசும் பேரினவாதிகளும் காட்டிய முனைப்புக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி போட்ட முட்டுக்கட்டையால் அரசு இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் உள்ளது.
இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கடந்த சனிக்கிழமை மெய்நிகர் இணையவழி கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டதுடன், இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பரம் அக்கறை மிகுந்த பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடிய போதே 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ஒழிக்கும் இலங்கை அரசின் முனைப்புக்கு இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி ஆப்பு வைத்துள்ளார். இதனால்தான் தற்போது மஹிந்த – மோடி கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருவதுடன் இந்த சந்திப்பையடுத்து இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட் டறிக்கையில் உள்ள விடயங்களை தவிர்த்து அல்லது இருட்டடிப்பு செய்து இலங்கை வெளிவிவகார அமைச்சும் பிரதமரின் அலுவலகமும் இச் சந்திப்பு தொடர்பில் அறிக்கை வெளியிட்டு சிங்கள மக்களை ஏமாற்றியுள்ளன.
மஹிந்த – மோடி கலந்துரையாடலில் பல விடயங்கள் பேசப்பட்ட நிலையில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கண்டிப்பாகவும் முழுமையாகவும் அமுல்படுத்தவேண்டுமென மஹிந்தவுக்கு மோடி தெரிவித்த விடயமே அரசையும் சிங்கள பேரினவாதிகளையும் இஞ்சி தின்ற குரங்கின் நிலைமைக்கு ஆளாக்கியுள்ளது.மோடியின் இந்த அழுத்தம் தொடர்பில் உடனடியாக மறுத்த அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வல, ’13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மஹிந்த – மோடிக்கிடையிலான பேச்சுவார்த்தையின் போது கலந்துரையாடப்படவில்லை. அந்த பேச்சுவார்த்தையில் நானும் கலந்து கொண்டிருந்தேன் என்ற அடிப்படையில் 13ஆவது திருத்தம் குறித்து பேசப்படவில்லை என்பதனை என்னால் உறுதிப்படுத்த முடியும் . இது தொடர்பாக ஊடக சந்திப்பொன்றை நடத்துவோம் என்றார். ஆனால் மறுநாள் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இந்திய – இலங்கை கூட்டறிக்கையில் 13ஆவது திருத்தம் தொடர்பில் பேசப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டவே” இந்தியப் பிரதமர் மோடி மட்டுமே அதனைப்பேசினார். மஹிந்த ராஜபக்ச அது தொடர்பில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை” எனக்கூறி அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹலிய சமாளித்துள்ளார்.
இதே ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ‘பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கிடையிலான இரு தரப்பு இணையவழி பேச்சுவார்த்தையின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தவில்லை. மாறாக, தன்னுடைய நிலைப்பாட்டையே அவர் தெரிவித்தார். இந்திய பிரதமர் இலங்கை மீது தனக்கு அதிக அக்கறையுள்ளதை வெளிப்படுத்தியிருந்தார். தமிழ் மக்கள் மீதும் அதிக அக்கறை இருப்பதாகக் கூறியதுடன், தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதாக தான் உணவர்வதாகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழி முறைகள் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென தனது அக்கறையை வெளிப்படுத்தியிருந்தார். இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை அதில் எவ்வித சிக்கலும் இல்லை” என்று அரசின் பொய்யை பாதுகாக்கும் வகையில் கருத்துக் கூறினார்.
இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை பத்திரிகைகளின் ஆசிரியர்கள், ஊடகங்களின் பிரதானிகளுடனான பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் சந்திப்பின்போது ,காணொளி மாநாட்டில் 13ஆவது திருத்தம் அமுலாக்கம் பற்றி இந்திய பிரதமர் நரேந்திர மோடி கதைத்தாரா என்று ஊடகங்களின் பிரதானிகளினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்தத்த பிரதமர் மகிந்த ராஜபக்ச, அரசியலமைப்பில் உள்ள விடயங்கள் தானே அவையென்று குறிப்பிட்டதுடன் அத்தருணத்தில் பேசப்பட்ட விடயங்கள் ஞாபகத்தில் இல்லை என்று சிரித்தவாறு கூறியுள்ளார்.
ஆனால் இது தொடர்பில் விடுக்கப்பட்ட இந்திய-இலங்கை கூட்டறிக்கையில், ‘அரசியலமைப்பின் பதின் மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் நல்லிணக்க செயன்முறையை முன்னெடுத்துச் செல்லுதல் உட்பட, ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதற்காக பிரதமர் மோடி இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார். இலங்கை மக்களின் ஆணைப்படி விருத்தி செய்யப்பட்ட நல்லிணக்கத்தை அடைந்து கொள்வதன் மூலம், அரசியலமைப்பு விதிகளை அமுல்படுத்துவதன் வாயிலாக, தமிழர்கள் உட்பட அனைத்து இனத்தவர்களின் எதிர்பார்ப்புக்களை தெளிவாக புரிந்து கொள்வதற்கு இலங்கை செயற்படும் என்ற நம்பிக்கையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படுத்தினார்” என்று தெரிவிக்கப்படடுள்ளது.
இதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவை இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் விடுத்த அறிக்கைகளில் ஒரு இடத்தில் கூட 13ஆவது திருத்தம் என்ற சொல்லே வரவில்லை. அத்துடன் மஹிந்த கொடுத்த உறுதிமொழி பற்றிக்கூடக் குறிப்பிடப்படவில்லை. இந்த விடயம் இந்தியத் தரப்புக்கும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.கூட்டறிக்கையில் ஒரு விடயத்தையும் தனிப்பட்ட அறிக்கைகளில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டுள்ளதன் மூலம் இலங்கை அரசு தனது நாட்டு மக்களை மட்டுமன்றி இந்தியாவையும் ஏமாற்ற முற்பட்டுள்ளதாகவே இந்தியத்தரப்பு கருதுவதாகவும் தெரிய வருகின்றது.
இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடையிலான கலந்துரையாடலினால் இலங்கை சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ள நிலையில் தமிழ் தரப்புக்கள் மத்தியில் இந்தியப்பிரதமரின் ’13 க்கான அழுத்தம்” புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் இலங்கைப் பிரச்சினையில் தமிழ் மக்களை கைவிட்டுவிட்ட நிலையிலும் இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்றில்லை,தமிழர்களுக்கும் எந்தப்பிரச்சினையும் இல்லை என இலங்கை அரசும் அறிவித்துவிட்ட நிலையிலும், சமஷ்டி, சுயாட்சி என்ற எந்தவொரு தீர்வும் இனித்தமிழர்களுக்கு கிடையாது என்பது கோத்தபாய – மஹிந்த அரசினால் உறுதிப்படுத்தப்பட்டு விட்ட நிலையிலும் தமிழர்களுக்கான ஒரேயொரு ஆறுதலான விடயமாக இந்த 13ஆவது அரசியலமைப்புத் திருத்தமே இருந்தது.
இந்த நிலையில் அதனையும் ஒழிக்க கோத்தபாய – மஹிந்த அரசு முடிவெடுத்துவிட்ட நிலையில் தமிழ் தரப்புக்கள் செய்வதறியாது தவித்தபோதுதான் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் ’13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாகவும் கண்டிப்பாகவும் இலங்கை அரசு அமுல்படுத்த வேண்டும்” என்ற அழுத்தம் இந்தியா மீது மீண்டுமொரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்தியா தனது அரசியல் நலன்களுக்காக இலங்கையுடன் சில விடயங்களில் ஒத்துழைத்து நடந்தாலும் இலங்கைத்தமிழர்கள் விடயத்தில் இதிலும் இந்தியாவின் அரசியல் நலன் இருந்தாலும் இன்னும் அக்கறையுடன்தான் இருக்கின்றது என்பதும் தமிழ் மக்களுக்கு ஆறுதல் தரும் விடயமாகவே உள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %