புதிய நாடாளுமன்ற குழு கூடியே ஊடகப் பேச்சாளரை தெரிவு செய்யும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் ஊடகப் பேச்சாளர் பதவியும் செயலற்றதாகி விடும் புதிய பாராளுமன்றக் குழுவே கூட்டமைப்பின் புதிய பேச்சாளரைத் தீர்மானிக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.<
வடக்கு – கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வி அடைவதற்கு எம்.ஏ.சுமந்திரன் காரணம் எனபங்காளி கட்சிகள் குற்றம் சுமத்துவது பற்றி கேட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரை நீக்குவது பற்றி தலைமைக்கு எந்த தீர்மானமும் எடுக்க முடியாது, புதிய நாடாளுமன்றக் குழு கூடும் போதே இத்தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்தின்போது கலந்துரையாடல் மாத்திரம் இடம்பெற்றதாகவும், எந்த தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் இரா. சம்பந்தன் மேலும் கூறினார்.
கடந்த நாடாளுமன்றத்தில், நாடாளுமன்றக் குழு இருந்தது, அதில் 14 உறுப்பினர்கள் இருந்தார்கள். அதில் சிலர் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை, சிலர் புது உறுப்பினர்களாக வந்துள்ளார்கள்.
புது நாடாளுமன்ற குழு கூட வேண்டும், இதனைத் தொடர்ந்துதான் தீர்மானிக்கப்படும்.
பழைய குழுவில் கடமை புரிந்தவர்கள் அந்தக் குழுவில் இல்லை, யாரையும் நீக்க வேண்டிய அவசியமும் இல்லை அதே வேளை புதியவர்களை பதவிகளிற்கு நியமிக்கலாம் எனவும் இரா.சம்பந்தன் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கடந்த வாரம் சந்தித்து கலதுரையாடிய போது, கூட்டமைப்பின் பேச்சாளர் மற்றும் கொறடா பதவிகளில் மாற்றம் செய்வது என்ற பங்காளிக் கட்சித் தலைவர்களின் முடிவை இரா.சம்பந்தன் ஏன மனதாக ஏற்றுக் கொண்டிருந்த சூழலில் தனது தனிப்பட்ட கருத்தினை இன்று வெளியிட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.