பத்து லட்சத்திற்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ்களை அச்சடிக்க மெக்சிகோ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூன்று மாகாணங்களில் இறப்புச் சான்றிதழ்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் இந்த முடிவை மெக்சிகோ எடுத்துள்ளது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, இன்று காலை 11:00 மணி நிலவரப்படி, மெக்சிகோவில் கொரோனாவால் 6,37,509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 67,781 பேர் பலியாகி உள்ளனர்.
5,31,334 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். ‘ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிட பல மடங்குகள் அதிகமாகவே இருக்கும்.
குறைவான எண்ணிக்கையிலேயே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் பல மரணங்கள் கொரோனா மரணங்களாக கணக்கிடப்படவில்லை’ என, வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கொரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும், மெக்சிகோ நான்காவது இடத்திலும் உள்ளன.
இந்நிலையில், பத்து லட்சத்திற்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ்களை அச்சடிக்க மெக்சிகோ முடிவு செய்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மெக்சிகோ அரசு தரப்பில், ‘இறப்புச் சான்றிதழ்கள் முழுவதுமாக தீர்ந்துவிட்டதாக மெக்சிகோவின் பஜா கலிபோர்னியா மாகாணம் தெரிவிக்கிறது.
இதேபோல், ஸ்டேட் மாகாணம் மற்றும் மெக்சிகோ சிட்டி நகரத்தில் இறப்புச் சான்றிதழ்கள் குறைவாகவே உள்ளன. போலி சான்றிதழ்களை தடுக்க பத்து லட்சத்திற்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ்களை அச்சடிக்க முடிவு செய்துள்ளோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.