அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கு அமைய வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் என நடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
உங்களுக்குத் தெரியும் இந்த நாட்டின் ஒரு பகுதியான வடக்கு, கிழக்கு யுத்தத்தை எதிர்கொண்டதோடு, 32 வருட மோதலால் அழிந்துபோயுள்ளது.
மோதல் காலத்தில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 1200 ரூபாய். முழுமையான அழிவுக்கு பின்னர் அந்த பிரதேசம் அபிவிருத்தி செய்யப்படவில்லை.
அந்த பிரதேச மக்கள் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளனர். அவர்களும் இந்த நாட்டின் ஏனைய மக்களைப் போல் வாழ நினைக்கின்றார்கள்.
ஆகவே அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கு அமைய அவர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும்.தனியான அவதானம் செலுத்தி அந்தப் பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அவ்வாறான ஒரு விடயம் இடம்பெறாத நிலையில் அவர்களது பொருளாதாரம் வளர்ச்சியடையாத நிலையில், அவர்கள் இந்த நாட்டில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்.
முன்னைய அரசாங்கமும் சரி, அதற்கு முன்னரான அரசாங்கமும் சரி அதனை செய்யவில்லை. குடும்பத்திற்கு பொருளாதாரத்தை ஈட்டுபவர்களாக இருந்த பலர் இன்று காணாமற் போயுள்ளனர்.
இது மிகவும் பரிதாபமான நிலை, குறிப்பாக கடந்த நான்கு வருடங்களாக அந்த மக்கள் வீதியில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச காணாமற்போனார் தினத்தில் போராட்டங்களை செய்யவுள்ளனர். அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம்.
இதற்கு அரசாங்கம் பதிலளிக்கும் என எதிர்பார்ப்பார்கள். எனினும் அரசாங்கம் அதனைச் செய்யப்போவது இல்லை. அதுவே நிதர்சனம்.
ஆகவே தான் சர்வதேசத்தின் தலையீட்டுடனான ஒரு விசாரணையின் மூலமான தீர்வினை அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அதற்காகவே மக்கள் எம்மை வாக்களித்து அனுப்பியுள்ளனர்.
அரசியல் கைதிகளும் அவ்வாறுதான் அவர்களும் குடும்பத்திற்காக உழைத்தவர்கள். பல வருடங்களாக அவர்கள் நீதி கிடைக்காமல் வாடுகின்றார்கள்.
அவர்கள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு எதிராக எவ்வித சாட்சிகளும் இன்றி அவர்கள் வாடுகின்றார்கள். இந்த விடயம் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.