// print_r($new['title']); ?>
day, 00 month 0000

''இனப்பிரச்சினை தீரும் என கூறுவது முழு உலகத்தையும் ஏமாற்றும் செயற்பாடு''

இனப்பிரச்சினைத் தீர்வுதொடர்பில் அறிவிப்புகளைத் தவிர்த்து ஆக்கபூர்வமாகச் செயற்படுங்கள்.

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் இதயசுத்தியுடன் செயற்படாமல், தீர்க்கப்படும் என்று அறிக்கை விடுவதால் மட்டும் நாட்டின் நெருக்கடி தீர்ந்துவிடாது என்றும் இன்றைய ஜனாதிபதி இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இதயசுத்தியுடன் செயற்படுகிறார் என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதத்தில் அவரது செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். 

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மேதின பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

கடந்த மேதினத்தன்று ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரையின் ஒருபகுதியாக இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்றும் இந்த வருடம் முடிவிற்குள் இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வு காணப்படவேண்டும் என்றும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். 

இதற்கு முன்பாக கடந்த வருட இறுதியில் பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றியபொழுது, பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சம்மதமா என ஏனைய கட்சிகளிடம் கேட்டபொழுது முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்தராஜபக்ச அவர்கள் தாங்கள் அதனை ஆதரிப்பதாகக் கூறினார்.

அதேபோல் எதிர்த்தரப்பில் இருந்த சஜித் பிரேமதாச அவர்களும் அதனை ஆதரிப்பதாகத் தனது கருத்தை வெளியிட்டார். ஒருசில சிங்கள இனவாதிகளைத் தவிர, பதின்மூன்றாவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்கவில்லை.

அதுமாத்திரமல்லாமல், 1988ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களது அரசாங்கத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் பதின்மூன்றாவது திருத்தம் அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டது. 

ஆகவே அதனை நடைமுறைப்படுத்துவதில் இப்பொழுதைய ஜனாதிபதிக்கு எந்தவிதமான தடங்கல்களும் இருக்கப்போவதில்லை. கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்திற்கு முன்பாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று கூறியபோதிலும் எதுவும் நடைபெறவில்லை. 

அதுமாத்திரமல்லாமல், சகல தமிழ், சிங்கள, முஸ்லிம் கட்சிகளையும் அழைத்து ஜனாபதி அவர்கள் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுமிருந்தார். 

அதில் தமிழ் தரப்பில் முக்கியமான கோரிக்கையாக இப்பொழுது நடைபெற்றுவரும் காணி அபகரிப்பு அல்லது காணிகளை கபளீகரம் செய்தல், சைவக்கோயில்களை உடைத்து புத்தகோயில்களைக் கட்டுதல், வடக்கு-கிழக்கில் குடிசனப் பரம்பலை மாற்றும் வகையில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளல் போன்ற சகல நடவடிக்கைகளையும் உடன் நிறுத்துமாறு கோரியிருந்தும்கூட, இதுவரை எதுவும் நடைபெறவில்லை. 

இந்த இலட்சணத்தில், அரசியல் சாசனத்தில் உள்ளவற்றையே நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காத ஒரு ஜனாதிபதி, புதிய அரசியல் சாசனம் பற்றியும் இந்த வருடத்திற்குள் இனப்பிரச்சினை தீரும் என்று கூறுவது தமிழ் மக்களை மாத்திரமல்ல முழுஉலகத்தையுமே ஏமாற்றும் ஒரு செயற்பாடாகும்.

1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதன் பின்னர், இனப்பிரச்சினைத் தீர்விற்காக பல்வேறு ஜனாதிபதிகளாலும் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டன. 

பிரேமதாச அவர்கள் மங்களமுனசிங்க தலைமையில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமித்தார். அந்த அறிக்கை நடைமுறைப்படுத்தப்படாமல் தூக்கிவீசப்பட்டது. 

அதற்குப் பின்னர் பதவியேற்ற சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக ஒரு தீர்வுத்திட்டத்தைக் கொண்டுவந்தார். பின்னர் அதுவும் கைவிடப்பட்டது. அவரைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பேராசிரியர் திஸ்ஸவிதாரன தலைமையில் சர்வகட்சி குழுவொன்று நியமிக்கப்பட்டது. 

அந்த அறிக்கையும் கண்டுகொள்ளாமலே விடப்பட்டது. பின்னர், ரணில் மைத்திரி ஆட்சியில் புதிய அரசியல் சாசனத்திற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அது பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. 

அதன் நிலை என்ன என்பது பற்றி யாருக்கும் தெரியாது. இலங்கையை ஆட்சிசெய்துவரும் அனைத்து அரசாங்கங்களும் இனப்பிரச்சினைத் தீர்வினைக் காலம் கடத்துவதை நோக்கமாகக் கொண்டே பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதுடன் ஆணைக்குழுக்களையும் நியமிக்கின்றார்களே தவிர, இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இதயசுத்தியுடனான எண்ணம் இவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

சென்றவாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழ்க் கட்சிகள் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரைச் சந்தித்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடிகள் பற்றிப் பேசியதுடன், முதற்கட்டமாக பதின்மூன்றாவது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படவேண்டும் என்றும் அதற்கு இந்தியா முழுமையான உதவிகள் ஒத்தாசைகளை வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தன. 

அதனை ஏற்றுக்கொண்டு, பதின்மூன்றை முழுமையாக நிறைவேற்ற இந்தியா உதவிகரமாக இருக்கும் என்று இந்திய உயர்ஸ்தானிகரும் தனது அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தியிருந்தார். 

இந்த நிலையில்தான் இலங்கையின் ஜனாதிபதி மீண்டும் ஒருமுறை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகவும் இந்த வருட இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்றும் கூறியிருக்கின்றார்.

இன்றைய காலகட்டத்தில் புதிய அரசியல் சாசனம் ஒன்றைக் கொண்டுவருவதற்கான உடனடி ஏதுநிலைகள் இல்லை. எனவே முதற்கட்டமாக தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறும்பொருட்டு, அரசியல் சாசனத்தில் உள்ள பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். 

அதனைத் தொடர்ந்து ஏற்கனவே அனைத்து ஜனாதிபதிகளும் ஏற்றுக்கொண்டதைப் போன்று, இது முழுமையான தீர்வு இல்லை என்ற அடிப்படையில், இனப்பிரச்சினைக்கான ஒரு முழுமையான தீர்வைக்காண இன்றைய ஜனாபதி இதயசுத்தியுடன் செயற்படவேண்டும்.- என்றார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்