// print_r($new['title']); ?>
day, 00 month 0000

யாழில் அமெரிக்க தூதரகம் தேவை: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் தூதரகக் கிளையைத் திறக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தை இந்நாளில் வேண்டுகின்றோம் என தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் சிவராமின் நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டதன் பின்னர் குறித்த சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றவும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2259 நாள் இன்று.

இன்று, 18 வருடங்களுக்கு முன்னர், 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் எமது அன்பிற்குரிய தமிழ் ஊடகவியலாளர் தாராக்கி சிவராம் படுகொலை செய்யப்பட்டார்.

நம் வாழ்வில் நம்மை விட்டு விலகாத சிறப்பு மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மறைந்த பிறகும் எம்மிடமே இன்னும் இருக்கிறார்கள் அவர்களில் தாராக்கி சிவராமும் ஒருவர்.

இன்று தமிழர்களுக்கு கடினமான நாள், எங்கள் இதயங்கள் வலிக்கிறது. இந்த நேரத்தில் சிவராமின் குடும்பத்திற்கு எங்கள் இதயம் செல்கிறது. சிவராமின் இதழியல் ஆய்வு தமிழர்களுக்கும் அமெரிக்க அரச துறைகளுக்கும் பொக்கிசமாக இருந்தது.

யாழ்ப்பாணத்தில் அமெரிக்க தூதரக கிளை
இலங்கையில் இனப்போரின் போது, இனப்போரை ஆழமாக அவதானித்த அமெரிக்க அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.

இலங்கையில் வடமேல் மாகாண ஆளுநரும், முன்னாள் இலங்கை கடற்படையின் தளபதியான வசந்த கரன்னாகொட மற்றும் அவரது குடும்பத்தினரையும் நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்துள்ளதை வரவேற்கிறோம்.

யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் தூதரகக் கிளையைத் திறக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தை இந்நாளில் வேண்டுகிறோம்.இந்த அமெரிக்க அலுவலகத்தை திறப்பதன் மூலம் தமிழர்கள் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை அமெரிக்கா கண்காணிக்க முடியும்.

போதைப்பொருள் கடத்தல், இரவு நேர கொலைகள் மற்றும் கொள்ளைகள், சிங்கள உளவாளிகளின் அச்சுறுத்தல், இனப்படுகொலை, இந்து கோவில்கள் மீதான ஆக்கிரமிப்பு, அடக்குமுறை மற்றும் காணி ஆக்கிரமிப்பு போன்ற அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க இருப்பு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதை பாதிக்கப்பட்டவர்களாகிய நாங்கள் உணர்கிறோம்.

உலக மனித உரிமைகளின் பாதுகாவலராக அமெரிக்கா இருப்பதால், யாழின் அமெரிக்கத் தூதரகம் இலங்கை அரசிடம் வேலை செய்யும் ஒவ்வொரு சிங்கள, தமிழ் அடிமைகளும் தங்கள் அசிங்கமான தொழிலை நிறுத்துவார்கள்.

அதேபோன்று ஐரோப்பிய ஒன்றியத்தின், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவை யாழ்ப்பாணத்தில் ஒரு அலுவலகம் திறக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகக் கிளை, தமிழர் பிரதேசத்தில் சீனப் படையெடுப்பை நிறுத்தும். முல்லைத்தீவு, பூநகரி , கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் சீனர்கள் பெருமளவிலான காணிகளை கொள்வனவு செய்யத் தயாராகி வருவதாக வதந்தி பரவி வருகின்றது என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.

அமெரிக்க தூதர் யூலி சுங் இந்த செய்தியை வாஷிங்டனுக்கு தெரிவிப்பார் என்று நம்புகிறோம், இதே நேரத்தில் நாங்கள் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு கோரிக்கை கடிதத்தையும் அனுப்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்