// print_r($new['title']); ?>
day, 00 month 0000

லடாக் எல்லைப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண இந்தியா, சீனா சம்மதம்

லடாக் எல்லைப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண இந்தியாவும் சீனாவும் சம்மதம் தெரிவித்து உள்ளன.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்கள் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் சுமார் 40 பேர் உயிரிழந்தனர்.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு லடாக் எல்லைப் பகுதிகளில் போர் பதற்றம் எழுந்தது. இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் எல்லையில் போர் பதற்றம் தணிந்துள்ளது. எனினும் லடாக் எல்லைப் பிரச்சினை இன்றளவும் நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது.

இந்த சூழலில் கடந்த 23-ம் தேதி இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகளின் 18-வது சுற்று பேச்சுவார்த்தை லடாக் எல்லைப் பகுதியில் நடைபெற்றது. இந்திய தரப்பில் லெப்டினென்ட் ஜெனரல் ரஷிம் பாலியும், அவருக்கு இணை யான சீன ராணுவ உயரதிகாரியும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறும்போது, “இருதரப்பு பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது. லடாக் எல்லைப் பிரச்சினையில் இந்தியா, சீனா இடையே முக்கிய உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன’’ என்றார்.

விரைவில் பேச்சுவார்த்தை

இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், “லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதுவரை தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண இந்தியாவும், சீனாவும் சம்மதித்துள்ளன’’ என கூறப்பட்டுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு தலைநகர் டெல்லியில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறுகிறது. இதில் சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் லீ ஷாங்பூ பங்கேற்கிறார். அப்போது இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவர் சந்தித்துப் பேச உள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்சினை குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீன அரசு ஊடகம் கருத்து

சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் நேற்று வெளியிட்ட தலையங்கத்தில் கூறியிருப்பதாவது. இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகள் கடந்த 23-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து இரு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இந்தியா, சீனா இடையே மோதலை ஏற்படுத்த அமெரிக்கா சதி செய்து வருகிறது. அமெரிக்காவின் மாய வலையில் இந்தியா சிக்கக்கூடாது. இந்தியா, சீனா இடையே இயல்புநிலை திரும்ப வேண்டும்.

வடக்கு நாடுகளுக்கும் தெற்கு நாடுகளுக்கும் இடையே இந்தியா பாலமாக செயல்படுகிறது. ஜி20 அமைப்புக்கு தலைமையேற்றுள்ள நிலையில் பல்வேறு சர்வதேச விவகாரங்களில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. இந்த நேரத்தில் இந்தியா, சீனா இடையே நல்லுறவு நீடிப்பது இரு நாடுகளுக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துக்கும் பலன் அளிக்கும். இவ்வாறு குளோபல் டைம்ஸ் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்