// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இருட்டறைக்குள் தொடரும் சித்திரவதை; சிறப்பு முகாமில் ராபர்ட் பயஸ் உணவுதவிர்ப்புப் போராட்டம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்த, முருகன், சாந்தன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகிய நால்வரும் தற்போது வரை திருச்சி சிறப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உச்ச நீதிமன்றம் விடுவித்தும் முழுமையாக விடுதலையை அனுபவிக்க முடியாதவாறு சூரிய வெளிச்சத்தை கூட பாரக்கவிடாது இருட்டறைக்குள் கொடுமைகளை அனுபவித்து வருவது குறித்து ராபர்ட் பயஸ் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த 06.03.2023 அன்று திகதியிட்டு ராபர்ட் பயஸ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் தமது விடுதலையை வலியுறுத்தி தொடர்ந்து எழுதிய கடிதங்களுக்கு எவ்வித பதில் நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் 08.03.2023 முதல் உணவுதவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கப்போவதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கமைவாக தனது கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 8ம் திகதி முதல் திருச்சி சிறப்பு முகாமில் பட்டினி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.

தமிழக முதல்வர் முக..ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 32 ஆண்டுகால கொடுஞ்சிறைவாசத்துக்கு பிறகு கடந்த 11.11.2022 அன்று உச்ச நீதிமன்றத்தால் ஆறு தமிழர்களும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், நான் உட்பட நான்கு பேர் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளதை தாங்கள் நன்றாக அறிவீர்கள்.

விடுதலை கிட்டியதும் சிறைவாழ்வு முற்றுப்பெற்று விட்டதாக பெரிதும் நம்பிக் கொண்டிருந்த எனக்கும், எனது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தமிழ்ச் சொந்தங்களுக்கும் சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக் கூடத்தில் அடைக்கப்பட போகிறேன் என்பது தெரியவில்லை.

வெளியுலகம் நான் விடுதலை பெற்று மகிழ்வோடு வாழ்வதாக எண்ணிக்கொண்டிருக்க, நானோ ஒவ்வொரு நாளும் வதைபட்டுக் கொண்டிருக்கிறேன். சட்டத்தின் பிடியிலிருந்து முழுமையாக விடுபட்டும் கூட இந்த நொடிவரை விடுதலையின் சுவையை என்னால் உணரமுடியவில்லை என்பதனை வேதனையோடு பதிவு செய்கிறேன்.

திருச்சி சிறப்பு முகாம் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் என்னையும், ஜெயக்குமாரையும், மற்றுமொரு அறையில் முருகனையும், சாந்தனையும் என அடைத்து வைத்திருக்கிறார்கள்.

உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு மூன்று மாதங்களிற்கு மேல் ஆகிறது. இன்னும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியவில்லை. சூரியனைக் கூட பார்க்கவிடவில்லை. துவைத்த துணிகளை வெயிலில் உலர்த்தவும் அனுமதியில்லை.

தங்கவைக்கப்பட்டுள்ள அறையிலேயே சமைத்துக்கொண்டு அங்கேயே உண்டு உறங்கவும் செய்கிறோம். சுவாசப்பிரச்சினைகள் ஏற்பட்டு ஆஸ்துமா, இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகியுள்ளேன்.

குறைந்தபட்ச உடல்நலனைப் பேண நடைபயிற்சி, விளையாட்டு என எதற்கும் அனுமதி கிடையாது. எப்போதும் ஒரே அறையில்தான் உள்ளோம். முகாமுக்கு உள்ளே என்றாலும் உலாவ விடுங்கள் எனக் கேட்டால் போலியான பாதுகாப்பை காரணமாக காட்டுகிறார்கள் அதிகாரிகள்.

எனது 32 ஆண்டுகால சிறை வாழ்வில் எத்தனையோ சிறைகளில் இருந்துள்ளேன். அங்கே எல்லாம் பலதரப்பட்ட மக்களோடு ஆண்டு கணக்கில் இருந்துள்ளேன். அப்போது எல்லாம் எந்த வித பாதுகாப்பு பிரச்சினையும் எழுந்ததில்லை. உள்ளேயே நடமாடும் குறைந்தபட்ச சுதந்திரம் மறுக்கப்பட்டதும் இல்லை.

ஆனால் சிறப்பு முகாமில் எல்லாம் தலைகீழாக இருக்கிறது. பெரும்பாலும் இங்கே எமது நாட்டைச் சார்ந்தவர்கள் தான் இருக்கிறார்கள். அவர்களாலேயே எமக்கு ஆபத்து எனக்கூறி முகாமில் விடாமல் ஒரே அறையில் அடைத்து வைத்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகவே எண்ணத்தோன்றுகிறது.

பாதுகாப்பு எனும் பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரை நிற்கவைத்து பெரும் நெருக்கடியை கொடுக்கிறார்கள். நான் இருந்த புழல் சிறையில் கூட இத்தகைய இறுக்கத்தை நான் என்றும் உணர்ந்ததில்லை.

சிறப்பு முகாமில் இருந்து விடுபட்டு அயல்நாட்டுக்கு செல்ல கோரிக்கை வைத்தால் அதற்கும் அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வருவதில்லை. அதுதொடர்பில் மூன்று வாரங்களுக்கு முன்பு எழுதிக் கொடுத்தும் இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.

இங்கே எமக்கு பொறுப்பாக உள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் வரும்போது இதுபற்றி கேட்டால் மேல் அதிகாரிகள் தான் இதுபற்றி முடிவு செய்ய வேண்டும் என கைவிரித்துவிடுகிறார்கள். பாதுகாப்புக்கு இருக்கும் அதிகாரிகளிடம் கேட்டால் அவர்களும் தங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என சொல்லிவிடுகிறார்கள்.

இவ்வாறாக ஒவ்வொன்றிற்கும் எல்லோரிடமும் கையேந்த வேண்டிய கையறுநிலை ஏற்படுகிறது. இதனால் உடல் நலமின்மையோடு பெரும் மன உலைச்சலுக்கும் ஆளாகியுள்ளேன்.

இத்தோடு அயல்நாடு செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்து தருவதற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித முன்னகர்வும் இல்லை. தற்போது நாம் இருக்கும் நிலைபற்றி மான்புமிகு முதல்வர் ஆகிய தங்களுக்கு 29.12.2022, 24.01.2023 ஆகிய திகதிகளில் இருமுறை கடிதம் எழுதியும் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.

இதனால் வேறு வழியற்ற சூழலில் எனது கோரிக்கையை நிறைவேற்ற கோரி 08.03.2023 திகதி முதல் உணவுதவிர்ப்புப் போராட்டத்தை தொடங்க உள்ளேன். இதனைத் தெரிவிக்கவே மூன்றாவது முறையாக இக்கடிதத்தை எழுதுகிறேன்” என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்