ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறும், இலங்கையில் நிலவும் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரமாகத் தீர்வு காண தமிழர்களுக்கு சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு (Independence Referendum) நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, ஆறு முக்கிய தமிழ் அமெரிக்க அமைப்புகள் கூட்டாக அமெரிக்க காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்த வாரம் கடிதம் அனுப்பியுள்ளன.
உலகத் தமிழ் அமைப்புக் கூட்டமைப்பு, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழ்ச் சங்கம், இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள், ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக் குழு, மற்றும் உலகத் தமிழர் அமைப்பு ஆகியவை இணைந்து எழுதிய இந்தக் கடிதம், 118வது அமெரிக்க காங்கிரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில்,இலங்கைத் தீவை முறையற்ற முறையில் காலனித்துவ நீக்கம் (improper decolonization) செய்த பிரித்தானியாவிடமிருந்து, தீவு சுதந்திரமடைந்து அடுத்த மாதம் 75 ஆண்டுகள் நிறைவடைந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான சர்வதேச சட்டங்களை நடைமுறைப்படுத்த உதவுமாறு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளனர்.
"சுதந்திரத்திற்கான வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்கும் ஆறு முக்கிய தமிழ் அமெரிக்க அமைப்புகளின் கூட்டுக் கடிதம் ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கான ஒரு முக்கிய திருப்பு முனையாகும். இது தமிழ் இனப்படுகொலை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்யும்" என்று ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக் குழுவின் துணைத் தலைவர் மற்றும் பொருளாளர் கலாநிதி முருகையா முரளிதரன் கூறியுள்ளார்.
தமிழர்களுக்கு நீதி வழங்குவதன் மூலமும், அவர்களின் இறையாண்மையை திரும்பக் கொடுப்பதன் மூலமும் மட்டுமே பிராந்தியத்தில் அமைதி மற்றும் திடநிலையை நிலைநாட்ட முடியும்.
நிரந்தர தீர்வு முக்கியமானது சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு என்பது ஜனநாயக, அமைதியான மற்றும் சரியான அணுகுமுறை சரியானதைச் செய்ய அமெரிக்கா தலைமை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.