day, 00 month 0000

12 வருடமாக சிறையில் இருந்த அரசியல் கைதி மன்னார் மேல் நீதிமன்றத்தால் விடுதலை

12 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி  சிவசுப்பிரமணியம் தில்லை ராஜ் குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) குற்றமற்றவர் என கருதி மன்னார் மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 13 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் பகுதியில் தில்லை ராஜாவுக்கு சொந்தமான மரக்காலை ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்ட தில்லை ராஜ் கடந்த 12 வருடங்களாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) குறித்த வழக்கு மன்னார் மேல் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி அரசியல் கைதியான சிவசுப்பிரமணியம் தில்லை ராஜ் குற்றமற்றவர் என்ற அடிப்படையில் விடுதலை செய்தார்.

விடுதலையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தில்லை ராஜ், ”12 வருடங்களின் பின் தான் குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப் பட்டுள்ளேன்.

எனக்காகவும் என் விடுதலைக்காகவும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி ரட்ணவேல் அவர்களுக்கும் அவரது உதவியாளர் தாயளனுக்கும் அதே போன்று யாழ் மாவட்டத்தில் 2016 ஆண்டு இடம் பெற்ற வழக்கில் என் சார்பாக ஆஜரான சட்டத்தரணி ரெமிறியேஸுக்கு நன்றிகள்.

நான் எந்த குற்றச்சாட்டுகளும் இன்றி 12 வருடம் சிறையில் இருந்து விடுதலையாகி இருக்கிறேன். என்னை போன்று என்னும் 25 வருடங்களுக்கு மேலாக அரசியல் கைதிகளாக சிறைகளில் எங்களுடம் ஒன்றாக இருந்த பலர் இன்னும் சிறைப்பட்டு இருக்கிறார்கள். அவர்களையும் விரைவில் விடுதலை செய்து தர வேண்டும்” என கண்ணீருடன் கேட்டுக்கொண்டார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்