// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஆனந்தசங்கரிக்கும் சம்பந்தனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை

ஆனந்தசங்கரிக்கும், சம்பந்தனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 5 கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் நேற்று (25.01.2023) மாலை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வடக்கு, கிழக்கில் இருக்கும் மக்களுக்கு தேவையோ இல்லையோ ஆனால் தெற்கில் இருக்கும் எதிர்கட்சி கூட்டுக்கு அவசியம் தேவையாகவுள்ளது.

கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்கு பின்பு எதிர் கட்சிகள் தமது நிலையை பரீட்சித்து பார்க்க பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் முயல்கின்றார்கள். எங்களைப் பொறுத்தவரை இந்த உள்ளுராட்சி தேர்தலை விட மாகாணசபை தேர்தலை நடத்தியிருந்திருந்தால் இருப்பதையாவது தக்க வைப்பதற்கு மாகாண சபை அதிகாரங்களை பயன்படுத்தி இருக்கலாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அரசியல் சக்தியாக, அரசியல் குரலாக இருக்க வேண்டும் என்பதற்காக பல முரண்பாடுகளுக்கு மத்தியில் இருந்த ஆயுதப் போராட்ட இயக்கங்களும் மிதவாத அரசியல் கட்சிகளும் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது.

அந்த நேரத்தில் அரசியல் கட்சிகளாக பதியப்பட்டிருந்த தமிழீழ விடுதலை இயக்கம், ஈபிஆர்எல்எப், மிதவாதக் கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டனி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியன தமிழீழ விடுதலைப் புலிகளின் அணுசரணையில் ஒன்றிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட வரலாறு உங்களுக்கு தெரியும்.

2002 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆனந்தசங்கரி ஐயா செயலாளராக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டனியின் சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இருந்தது. அப்போது 16 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்தோம்.

அப்போது 15 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே நிலைப்பாட்டில் இருந்த போது ஆனந்தசங்கரி ஐயா வேறு ஒரு நிலைப்பாட்டில் இருந்தார். அதில் ஏற்பட்ட முரண்பாடு சங்கரி ஐயா கட்சியையும், சின்னத்தையும் தூக்கிக் கொண்டு சென்று விட்டார். அப்போது சம்மந்தன் ஐயா நீதிமன்றத்தை நாடுகின்றார்.

சம்மந்தன் ஐயாவுக்காக வாதாடுவதற்காக ஒரு சட்டத்தரணியாக வந்த எம்.ஏ.சுமந்திரன் அவர்களுக்கு, இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை இல்லாமல் செய்யும் அளவுக்கு சம்மந்தர் ஐயா அதிகாரம் கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கடந்த மாதம் மட்டக்களப்பில் கூடியிருந்தது.

அந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இறுதியாக இருந்த 3 கட்சிகளும் இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தனித்தனியாக போட்டியிட வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு ஒன்றரை மாதத்திற்கு முன்பே இதே கருத்தை சுமந்திரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் கூறியிருந்தார்.

ஆக சுமந்திரன் அவர்கள் எடுத்த தீர்மானம் மத்திய குழுவில் திணிக்கப்பட்டுனள்ளது என்பது தான் உண்மை. அதை தமிழரசுக் கட்சியின் தலைவர் விரும்பியிருக்கவில்லையாம். எல்லாம் தனது கையை மீறிச் சென்றுவிட்டதாக தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டத்தில் அவரே எம்மிடம் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்ல, அந்தக் கூட்டத்தில் இருந்த கொழும்பு மாவட்ட தமிழரசுக் கட்சி தலைவரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான கே.வி தவராசா அவர்களும் பொது வெளியில் தெரிவித்திருந்தார். 2004 இல் சம்மந்தன் ஐயாவுக்காகவும், தமிழரசுக் கட்சிக்காகவும் வாதாடிய எம்.ஏ.சுமந்திரன் அவர்களுக்கு 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியில் ஆசனம் தரலாம் என உறுதி மொழி வழங்கப்படுகிறது.

2009 மே 18 இற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டு அலுவலகம் கிளிநொச்சியில் இருந்தது. 2009 இற்கு பின்பு முழு தலைமைத்துவமும் சம்மந்தர் ஐயா கைவசம் வருகிறது. 2010 இல் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளவாங்கப்பட்ட சுமந்திரனால் வஞ்சகமான சிதைவாக கஜேந்திரகுமார் அணி வெளியேறுகிறது.

2015 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு 2 தேசியப்பட்டியில் உறுப்பினர்கள் கிடைக்கிறது. தமிழரசுக் கட்சி சார்ந்து 8 பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சி சார்ந்து 6 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

 

ஐயா சம்மந்தர் அவர்கள் உண்மையாகக தமிழ் தேசியத்திற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், தலைமை தாங்குபவராக இருந்திருந்தால் ஒரு தேசியப் பட்டியலை தமிழரசுக்கட்சிக்கும், அடுத்த தேசியப் பட்டியலை ஏனைய கட்சிகளுக்கும் கொடுத்திருக்க வேண்டும். அது தான் ஜனநாயகம். அது தான் தர்மம். அது தான் ஒரு பெரிய மனிதனுக்கு இலட்சணம்.

அந்த இலட்சணத்தை இல்லாமல் ஆக்கி யாழ்ப்பாண மாவட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக வந்து விடுவார் என்பதற்காக அந்த இரண்டு தேசியப்பட்டியலையும் தமிழரசுக் கட்சி எடுத்துக் கொண்டது. 2010 இல் இருந்து 2015 வரை கூட்டமைப்பின் பேச்சாளராகவிருந்த சுரேஸ் பிறேமச்சந்திரன் பாராளுமன்றம் வந்தால் அவரது பேச்சாளர் பதவி தொடரும் என்பதற்காக அந்த பதவி மறுக்கப்படுகிறது.

அது மாத்திரமல்ல, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 2 பாராளுமன்ற உறுப்பினர்களில் வைத்தியர் சிவமோகனை கபளீகரம் செய்து தங்கள் கட்சிக்குள் உள்வாங்குகிறார்கள். மீதமாக இருந்த சிவசக்தி ஆனந்தனுக்கு பாராளுமன்றத்தில் பேச்சு உரிமை மறுக்கப்படுகிறது.

இதன் மூலம் ஈபிஆர்எல்எப் வெளியேற்றப்பட்டது. வடமாகாண சபைத் தேர்தலின் போது ஈபிஆர்ஏல்எப், ரெலோ, புளொட் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மாவை சேனாதிராஜா அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக கொண்டு வர அழுத்தம் கொடுத்தோம். தன்னுடைய குரு, சட்டக்கல்லூரியில் தனக்கு கற்பித்தவர் என்ற காரணத்திற்காக விக்கினேஸ்வரன் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக கொண்டு வந்தார்கள்.

நாம் எல்லோரும் இணைந்து அவரை முதலமைச்சர் ஆக்கினோம். அவரை கொண்டு வந்தவர்களே 2016 ஆம் ஆண்டு அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுகிறது. எப்போ எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் வருகின்றாரோ அன்றிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிதைக்கப்படுகின்றது.

இன்று தனித்தனியாக உள்ளுராட்சி தேர்தலை எதிர் கொண்டால் அவரவர் தமது கட்சிக்காக பிரச்சாரம் செய்வார்களே தவிர, தமிழ் தேசியம் பற்றி யாரும் கதைக்க மாட்டார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயர் எங்களில் இருந்து மறைந்து செல்லும். தமிழ் தேசியம் அழிந்து செல்லும். சிங்கள பெரும்பான்மை கட்சிகள் தமிழ் மக்கள் ஒன்றுபடக் கூடாது என அவர்கள் விரும்பும், அவர்களது நிகழ்சி நிரல் அவர்களது மறைமுக ஏஜென்டுகளால் நிறைவேற்றப்படுகிறது.

2004 ஆம் ஆண்டு சூரியன் சின்னத்தைத் தூக்கி கொண்டு சங்கரி ஐயா சென்றதைப் போன்று 18 வருடங்களுக்கு பின்பு சம்மந்தன் ஐயாவும் அவரது கூட்டமும் வீட்டுத் சின்னத்தை தூக்கிக் கொண்டு செல்கிறார்கள். இருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஏனெனில் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்பது எங்களுக்கு தெரியும்.

இருந்தாலும், இன்று வீட்டு சின்னம் என்பது மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றால் கிராமப் புறங்களில் வீடு தான் என்பது அவர்களது எண்ணம். அந்த சின்னத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்ற பாக்கியம் எங்களுக்கும் இருகின்றது.

2004 இல் இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் பெரும் பங்கு வகித்தவர்கள் நாங்கள் தான். வீட்டு சின்னத்தில் தும்புதடியை வைத்தாலும் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற எண்ணத்துடன் சென்றுள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழிப்பதன் மூலம் நீங்கள் செய்யும் துரோகம் தமிழ் மக்களுக்கு சிறிதல்ல.

2004 இல் கருணா விடுதலைப் போராட்டத்தை பிளவுபடுத்த முற்பட்டான். ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் அவரது அணுசரணையில் விடுதலைப்புலிகள் பிளவு படுத்தப்பட்டார்கள். அப்போது விடுதலைப் புலிகள் முப்படைகளையும் வைத்துக் கொண்டு பலமாக இருந்தார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 24 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மிகவும் பலமான சக்தியாக இருந்தது. கருணாவின் பிளவு பெரிதாக பாதிக்கவில்லை. ஆனால் இன்று நிர்க்கதியற்று நடுதெருவில் தமிழினம் நிற்கும் போது தேசியத்தை அழிப்பது என்பது மகாதுரோகம். தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த அத்தனை ஆத்மாக்களும் உங்களை மன்னிக்காது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆயதப் போராட்ட இயக்கங்களில் இருந்து நீக்கள் வேறுபட்டதாக இன்று பிரச்சாரம் செய்கின்றீர்கள்.

2010 ஆம் ஆண்டுக்கு பின்பு அரசியலுக்கு வந்து இன்று தமிழ் மக்களுக்கும், உங்களது கட்சிக்கும், தலமை தாங்க முயற்சிக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் ஏதாவது தொடர்பு இருகின்றதா. இந்த மக்களுக்காக ஒரு நாளாவது பட்டினி கிடந்துள்ளீர்களா. ஒரு நாள் காட்டிற்குள் நுளம்பு கடிக்குள் இருந்துள்ளீர்களா. காயப்பட்ட போராளிகளின் இரத்தத்தையாவது கண்டிருப்பீர்களா அல்லது அவர்களை தூக்கியிருப்பீர்களா.

மக்களுக்கான ஒரு தீர்வு வரும் போது, 100 வீதம் நிதமாக சிந்தித்து முடிவு எடுக்க முடியாத நீங்கள் தனித் தனியாக தேர்தலை சந்திக்க சொல்கின்றீர்கள். நீங்கள் பிரிந்து செல்வதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழிந்து விடாது.

2010 கஜேந்திரகுமார் அணி வெளியேறிய போதும், 2015 இல் ஈபிஆர்எல்எப் வெளியேறிய போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பாக தான் பயணித்து. இன்று தமிழரசுக் கட்சி வெளியேறுவதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழிந்து விடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது எனக் கூறுகின்றீர்கள்.

ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அப்படி கூறவில்லை. சுரேஸ் பிறேமச்சந்திரன் அப்படி கூறவில்லை. ஆனால் எப்படி உங்களால் கூற முடியும். நாங்கள் முக்கியமான தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம். இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கிறது. சர்வதேசத்தின் உதவியை நாடியிருக்கின்றது.

இந்தியா பெரும் அழுத்ததை கொடுக்கிறது. 13 ஆவது திருத்த சட்டத்தை முற்று முழுதாக அமுல்படுத்தி மாகாண சபைத் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்கிறது. மெல்ல மெல்ல இலங்கை அரசு அதை நோக்கி நகர்கின்றது. எங்களுடன் பேசுவதற்கான காலங்கள் கனிந்து வருகிறது. நாங்கள் பிரியக் கூடாது. ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

தேர்தலின் பின் இணைந்து செயற்படுவோம் என்கிறார்கள். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கு ஒரு பாடத்தை புகட்ட வேண்டும். அதன் பின் தலைகணம் இல்லாத தமிழரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைய வேண்டும் எனத் தெரிவித்தார். 

 

 

 

 

 

 

 

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்