இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகளை மீறிய குற்றத்தில் சிறிலங்காவின் இரண்டு முன்னாள் அதிபர்களும் சகோதரர்களுமான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 4 பேருக்கு கனேடிய அரசாங்கம் தடைகளை விதித்தமையை கனேடிய தமிழர் பேரவை வரவேற்றுள்ளது.
கனடாவின் சிறப்புப் பொருளாதார நடவடிக்கை குறித்த விதிமுறைகளின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச, படைத்துறை அதிகாரியான சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி உட்பட்டவர்களுக்கு கனடா தடைகளை விதித்துள்ளது.
தடைவிதிக்கப்பட்டவர்களுக்கு கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கனடாவுக்குள் உள்நுழைவதற்குரிய அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.
தடைவிதிப்பட்டவர்களுடன் கனேடிய குடியுரிமையுள்ளவர்கள் கனடாவுக்கு உள்ளே அல்லது வெளியே எந்தவொரு நிதி பொருளதாதார மற்றும் சொத்துகள் தொடர்பான தொடர்புகளை பேணுவது தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம், பொருளாதாரம் மற்றும் அரசியல் உறுதியின்மையினால் மனித உரிமை மோசமாக மீறப்பட்டுள்ளதாகவும் கனேடிய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
இதனடிப்படையில், சர்வதேச சட்டத்தை மீறியவர்களுக்கு எதிராக கனடா கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளதாக அந்நாட்ட வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்கு தகுதியானவர்கள் எனவும் அதற்கான பொறுப்புக்கூறலை நிறுவ கனடா தனது உறுதிப்படை இலங்கைக்கு தொடர்ந்தும் வழங்குமென மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு எதிராக கனேடிய அரசாங்கம் விதித்துள்ள தடையை கனேடிய தமிழர் பேரவை வரவேற்றுள்ளது.
அத்துடன் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரியும் கனேடிய அரசாங்கத்தின தடையை வரவேற்றுள்ளார்.
கனேடிய அரசாங்கத்தின் இந்த நகர்வு இலங்கையில் பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உத்வேகமளிப்பதாக ஹரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.